சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா படானி, பாபி தியோல், நட்டி, யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி, கருணாஸ், போஸ் வெங்கட் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கங்குவா.
மிகப்பெரும் பொருட் செலவில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல்ராஜா படத்தினை தயாரித்திருக்கிறார்.
வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஐந்து மொழிகளில் 11000 திரைகளுக்கு மேல் மிகவும் பிரமாண்ட வெளியீடாக படம் இன்று திரைகண்டிருக்கிறது.
கதைக்குள் பயணித்து விடலாம்,
1070 ஆம் ஆண்டு நடக்கும் கதையாக படம் பயணம் செய்கிறது. கடலுக்கு நடுவே அருகருகே நான்கு தீவுகள். அதில், ஒரு தீவான பெருமாச்சியை ஆளும் தலைவரின் மகனாக வருகிறார் கங்குவா.
மற்றொரு தீவான அரத்தியை ஆள்பவராக வருகிறார் பாபி தியோல். இந்த இரு தீவுகளில் இருப்பவர்களுக்கும் வெவ்வெறு குணாதிசயங்கள்.
பல வருடங்களாக இருவருக்குள்ளும் பகை இருந்து கொண்டே இருக்கிறது. பெருமாச்சி தீவினை சூழ்ச்சி செய்து வீழ்த்தலாம் என்று எண்ணுகிறார்கள் பகைவர்கள். சூழ்ச்சியில் இருந்து தப்பித்து பாபி தியோல் மகன்கள் இருவரை கொன்று விடுகிறார் கங்குவா.
இதனால் வெகுண்டு எழும் பாபி தியோல், கங்குவாவை பழி வாங்க செல்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
விமர்சனத்துக்குள் சென்று விடலாம்…
நடிகர் சூர்யா, கங்குவா கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கங்குவாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் எண்ட்ரீ காட்சிகளில் ஆரம்பித்து இறுதி வரை கங்குவா கதாபாத்திரத்தை விட்டு துளியும் விலகிச் செல்லாமல், தனது கேரக்டரை செவ்வனவே செய்து முடித்திருக்கிறார் சூர்யா. ரசிகர்களுக்கு எந்தெந்த இடத்தில் என்னென்ன மீட்டர் கொடுக்க வேண்டுமோ அதை அளவாக கொடுத்து மிரட்டியிருக்கிறார் சூர்யா. பல வருட காத்திருப்புக்கு பின் ரசிகர்களுக்கு தரமான விருந்தை படைத்திருக்கிறார் சூர்யா.
2024 ஆம் ஆண்டில் மற்றொரு கதாபாத்திரத்தில் தோன்றும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நாயகி திஷா படானி. இவரை இன்னும் நன்றாகவே காட்சிகளில் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
மிகப்பெரும் வில்லனாக இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டு வரும் பாபி தியோலை, இப்படத்தில் பெரிதாக காட்சிப்படுத்தவில்லை என்று தான் தோன்றியது. க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சியையும் இன்னும் வெறித்தனமான வேட்டையாடுவது போன்று காட்சிப்படுத்தியிருந்திருக்கலாம்.
கருணாஸ், போஸ் வெங்கட், நட்டி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை நன்றாக புரிந்து கொண்டு தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
அண்ணாத்த என்ற படத்தைக் எடுத்து பெரும் சரிவிற்கு பின்னால், கடும் உழைப்பைக் கொடுத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள மெனக்கெடல், அதற்கான உழைப்பு அனைத்தும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும், திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யமாக்கியிருக்கலாமே என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.
காட்சிகளை இன்னமும் வெளிச்சமாகவே கொடுத்திருந்திருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பைத் தவிர மற்றவர்களின் நடிப்பை பெரிதாக நம்மால் கவனிக்க முடியாத அளவிற்கு குறைவான வெளிச்சத்தையே கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வெற்றி இதை சற்று நன்றாகவே கவனித்திருக்கலாம்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், பாடல்கள் புல்லரிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசையிலும் பெரிதாக குறை ஒன்றும் கூறும் அளவிற்கு எதுவுமில்லை. பி ஜி எம் தெறிக்கவிட்டிருக்கிறது.
முதலையுடனான சண்டைக் காட்சி தத்ரூபமாக சிஜி செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவினர் படத்திற்கு பலம் தான்.
2024 ஆம் ஆண்டில் நடக்கும் காட்சிகள் எதுவும் படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். கார்த்தியின் சிறப்பு தோற்றம், இன்னும் மிரட்டியிருந்திருக்கலாம்.
சூர்யாவின் கடும் உழைப்பிற்காக கங்குவாவை கொண்டாடலாம்..