
பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த காந்தாரா. கடந்த வாரம், இப்படம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் எந்தவொரு நெகடிவ் விமர்சனமும் இல்லாமல், அனைவரும் பெரிதும் பாராட்டும் இப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை இப்படத்தின் விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
1800களில் நடக்கும்படியாக கதை நகர, ஒரு மன்னனுக்கு எல்லாம் இருந்து எதோ ஒன்று இல்லை என்பது போன்ற உணர்வு.. இதனால் நிம்மதி இன்றியும் உறக்கம் இன்றியும் தவித்து வருகிறார். தனக்கு இருக்கும் குறைபாட்டை நீக்க பயணம் செல்கிறார்.
அப்போது மலைப்பகுதியில், ஒரு கிராம மக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தைக் கண்டு இந்த தெய்வம் தான் எனது குறைபாட்டை நீக்க வந்த ஒன்று என்று மன்னன் எண்ணுகிறார். பதிலுக்கு அக்கிராம மக்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானமாக வழங்குகிறார் அந்த மன்னன்.
வருடங்களும் செல்ல செல்ல, அந்த நிலத்தின் மதிப்பு ஏற, மன்னனின் வாரிசு வகையறாக்கள், கிராமத்திற்கு தானமாக கொடுத்த நிலங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள்.
காலம் காலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வரும் மக்களுக்கு நில உரிமை கிடைத்ததா.? அந்த தெய்வம் கிராம மக்களுக்கு எதுவரை துணை நின்றது.?
கிராமத்தில் காட்டுமிராண்டித்தனமாக சுற்றித் திரியும் நாயகன் ரிஷப் ஷெட்டி, மக்களுக்கு என்ன செய்தார்.? என்பதே படத்தின் மீதிக் கதை..
நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி, கதையின் நாயகனாக மட்டும் தோற்றமளிக்காமல், ஒரு மலைவாழ் கிராம மக்களில் ஒருவராக நடித்து படத்திற்கு மிகப்பெரும் தூணாக காட்சியளித்திருக்கிறார். படத்தின் எண்ட்ரீ காட்சியிலேயே அனைவரையும் பெரிதாக கவர்ந்திழுக்கிறார் ரிஷப்.
ஆக்ஷன், காதல், எமோஷன், காமெடி என நாலாபுறமும் இறங்கி அடித்து ரசிகர்களை கண்ணிமைக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் செய்து படத்திற்குள் நம்மையும் கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
ஒரு அழகான கிராம கிராம வாழ்வியலையும் அங்கு நடக்கும் கடவுள் சம்பிரதாயங்களையும் கண் முன்னே கொண்டு வந்து இயக்குனராக நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ரிஷப்.
படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவருக்கும் சமமான காட்சிகளை கொடுத்து அனைவரின் நடிப்பையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்திருப்பது இசையும் ஒளிப்பதிவுமே…. இரு பெரும் தூண்களாக நின்று படத்தினை தாங்கியிருக்கிறார்கள் .. சண்டைக் காட்சி ஒவ்வொன்றும் நம்மை புல்லரிக்க வைத்திருக்கின்றன.
படத்தோடு நம்மையும் ஒன்றி பயணம் செய்ய பின்னணி இசை பக்கபலமாக நின்றிருக்கிறது.. பொல்லாதவன் கிஷோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க 1980-90 கால கட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் ரிஷப். ஒரு அழகான வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் ஆங்காங்கே தென்படும் ஒரு சில காமெடி காட்சிகளும் பெரிதாக கைகொடுத்திருக்கின்றன. மெதுவாக முதல் பாதி நகர, இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு வேகம் எடுக்கிறது.
காந்தாரா – காந்தமாய் ஈர்ப்பவன்..





