
கருப்பங்காட்டு வலசு என்ற கிராமத்தில் நடக்கும் மர்மமான கதை தான் இப்படத்தின் கதை. கதையின் நாயகன் (பச்சைக்கிளி வாத்தியார்) எபநேசர், ஊர் கோவில்களில் சலங்கை கட்டி ஆடும் கலைஞர்.
இவருக்கு ஜோடியாக முறைப் பொண்ணு மல்லி. தொழில்நுட்பம் கடந்து வரும் இக்காலகட்டத்திலும், கழிவறை, குப்பை அள்ளும் வசதி, சாலை வசதி என எதுவும் இல்லாத கிராமமாக முக்கியமாக ஜாதி வெறி தலைத்தூக்கிய கிராமமாக இருந்து வருகிறது கருப்பங்காட்டு வலசு.
அந்த ஊரில் பிறந்து வெளிநாட்டில் படித்து மீண்டும் அதே ஊருக்கு வருகிறார் நீலிமா ராணி. கிராமத்தை மாற்றுவதற்காக ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கிறார் நீலிமா ராணி.
ஊரில் பாதி பேர் இதற்கு ஆதரவாகவும், பாதி பேர் எதிர்ப்பாகவும் உள்ளனர். கிராமத்தில் ஒருநாள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் நாயகன் பச்சைக்கிளி வாத்தியார் மற்றும் மல்லி இருவரும் சலங்கைக் கட்டி ஆடுகின்றனர்.
மறுநாள் காலையில்,ஊரில் மர்மமான முறையில் நால்வரின் பிணம் கிடக்கிறது. இதைக் கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

அவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என அறிய இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் அக்கிராமத்திற்கு வருகிறார். காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பதே படத்தின் கதை.
நாயகன் எபநேசர் கதைக்கேற்ற நடிப்பு தான் என்றாலும், ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் எட்டி பார்த்து விட்டுச் சென்றதை ஏற்க முடியவில்லை. நீலிமா ராணி, சீரியல்களில் நடிப்பது போன்ற ஒரு நடிப்பை கொடுத்து விட்டுச் சென்றுள்ளார். ஏனைய கதாபாத்திரங்களின் நடிப்பை இயக்குனர், அவர்களிடம் இன்னும் சற்று அதிகமாக வாங்கியிருந்திருக்கலாம்.
திருட்டு தொழில் செய்யும் குடிகார கதாபாத்திரத்தில் நடித்த கௌரிசங்கர் என்பவர் எதார்த்தமாக நடித்து மனதில் நின்றார். மாரி செல்லதுரை தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அழகான மூலக் கதையை, திரைக்கதையாக அமைக்கும் விதத்தில் இயக்குனர் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சற்று சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் ஏற்றி, நேரத்தை குறைத்திருந்தால் அழகான கிராமத்து த்ரில்லர் கதைக்களத்தை அமைத்த பெருமை இயக்குனருக்கு கிட்டியிருக்கும்.
சரவணனின் ஒளிப்பதிவு கலர்புல், ஆதித்யா மற்றும் சூர்யாவின் இசை ஓகே ரகம் தான்.
கருப்பங்காட்டு வலசு – இன்னும் சற்று மெருகேற்றியிருந்திருக்கலாம். ..





