
விடுதலை படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் படம் தான் விடுதலை பாகம் 2.
முதல் பாகத்தில் தோன்றிய நடிகர்கள் அனைவரும் இப்படத்திலும் தோன்றியிருக்கின்றனர். புதிதாக சிலரும் இப்பாகத்தில் இணைந்தும் உள்ளனர்.
இந்த பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், புவனா ஸ்ரீ, வின்செண்ட் அசோகன், சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் இப்பத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. மேலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ஆர் எஸ் இன்போஃர்டெயின்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் கதை நகர்கிறது. குமரேசனின் (சூரி) முயற்சியில் கைது செய்யப்படுகிறார் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி). கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவனின் கீழ் இயங்கும் பட்டாலியன் போலீஸாரின் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.
அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி விஜய் சேதுபதியை இடமாற்றுகின்றனர். அவரை அழைத்துச் செல்ல சேத்தன் தலைமையிலான ஐந்து பேர் உடன் செல்கின்றனர். ஜீப் டிரைவராக செல்கிறார் சூரி.
காட்டு வழிப் பாதையில் இவர்களது பயணம் தொடங்குகிறது. தான் எப்படி மக்கள் தலைவனானேன் என்று உடன் வரும் போலீஸாரிடம் கூறுகிறார் விஜய் சேதுபதி.
கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. ஜமீன் தாரர்களும் பெரும் செல்வந்தர்களும் ஊரை ஆண்ட காலம் அது. கூலி வேலை பார்ப்பவர்கள் அவர்களுக்கு பணிவிடை முதற்கொண்டு அனைத்து வேலையையும் செய்து வருகின்றனர். இதை எதிர்த்து அந்த ஊரில் உள்ள கருப்பு (கென்) கேள்வியெழுப்புகிறார். அங்குள்ள பாடசாலைக்கு வாத்தியாராக இருக்கிறார் விஜய் சேதுபதி. மிகவும் நேர்மையாகவும் எதையும் சட்டப்படி செய்ய வேண்டும் என்றெண்ணுபவர்.
இந்நிலையில், கிராமத்தில் இருக்கும் பெண்ணை ஊர் ஜமீன்தார் பலவந்தம் செய்து விட. கோபம் கொண்ட கென், ஜமீன்தாரை வெட்டி கொல்கிறார். ஜமீன்தாரின் தம்பியாக வரும் போஸ் வெங்கட், கென்’னை கொலை செய்ய துடிக்கிறார். கென்னை தனது பாதுகாப்பில் வைத்து போலீஸில் ஒப்படைக்க நினைக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனால், போலீஸாரோ போஸ் வெங்கட்டிற்கு தகவல் கொடுத்து விடுகின்றனர். கென்னையும் அவனது காதலியையும் வெட்டிக் கொல்கின்றனர். படுகாயங்களுடன் கிடந்த விஜய் சேதுபதியை காப்பாற்றுகிறார் கிஷோர். கம்யூனிஸ்ட் தலைவரான கிஷோர், ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தன்னால் முடிந்த நீதியை போராடி பெற்றுத் தருகிறார்.
கிஷோரின் தலைமையக் கண்டு அவரிடம் கம்யூனிசத்தைக் கற்றுக் கொண்டு, விஜய் சேதுபதியும் களம் இறங்கி மக்களுக்காக போராடுகிறார். சர்க்கரை ஆலைத் தொடங்கி பல போராட்டங்களில் பங்கேற்று, அவர்களுக்கான நீதியை பெற்றுத் தருகிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், முதலாளிகள் அனைவரும் ஒன்று கூடி போராளிகளை ஒட்டுமொத்தமாக களை எடுக்க நினைக்கையில், விஜய் சேதுபதி கையில் ஆயுதத்தை ஏந்துகிறார்.
இந்த அடித்தட்டு மக்களுக்கான உரிமையை பெற ஆயுதம் மக்களை பாதுகாக்கும் கருவியாக மாறுகிறது. இப்படியாக பெருமாள் என்பவர் மக்களின் மத்தியில் வாத்தியாராக உருவெடுக்கிறார்.
வாத்தியாரை கைது செய்த போலீஸார் அவரை என்ன செய்தனர் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான விஜய் சேதுபதி, ஒரு தேர்ந்தெடுத்த நடிப்பைக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். பேசும் வசனம், உடல்மொழி, கண்களின் பார்வை என அனைத்தும் பெருமாள் வாத்தியாராகவே வாழ்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மஞ்சு வாரியரிடம் காதலை சொல்லும் இடத்திலாக இருக்கட்டும், தனது மனைவியுடன் மிக இயல்பாக இருக்கும் போதாக இருக்கட்டும் போராட்ட களத்தில் வெறி கொண்டு ஆடும் ஆட்டமாக இருக்கட்டும் என பல பரிமாணங்களை இப்படத்தில் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
முதல் பாகத்தை முழுவதையும் தனதாக்கிக் கொண்ட சூரி, இப்பாகத்தில் சற்று ஒதுங்கியே நிற்கிறார். இரண்டாம் பாகம் முழுவதையுமே விஜய் சேதுபதி எடுத்துக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல், தனக்குக் கொடுக்கப்பட்டதை மிக இயல்பாக நடித்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சூரி. அதிலும், சேத்தனுடனான காட்சி மிரட்டல் தான்.
படத்தில் வில்லத்தனத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்து படம் பார்ப்பார்களுக்கு கோபத்தைக் கொண்டு வரக் கூடிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியிருக்கிறார் சேத்தன். இவரைக் கண்டாலே பலரும் எரிச்சல் வருகிறது அப்படியாக அக்கதாபாத்திரமாகவே மாறி நின்றிருக்கிறார்.
மஞ்சுவாரியரின் கதாபாத்திரமும் மிகவும் இயல்பானது தான். கள போராட்டம், விஜய் சேதுபதியுடனான பயணம் என தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர்.
மேலும் படத்தில் நடித்திருந்த, தமிழ், இளவரசு, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், கிஷோர், என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களாகவே மாறி கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
வெற்றிமாறனின் பட்டறையில் தீட்டப்பட்ட கென் கருணாஸின் நடிப்பு என்பது நடிப்பின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். சேற்றில் கென் கருணாஸின் சண்டைக் காட்சி பிரமிக்க வைத்தது.
படத்தின் பலமே வசனம் தான் என்று கூற வைத்துவிட்டார் வெற்றிமாறன். அந்த காலத்தில் நடந்த அரசியல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடிய திராவிட, கம்யூனிச கட்சிகளின் பெருமையை அழுத்தமாக கூறியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த காட்சிகளை காணும் போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றில்சில மாற்றத்தை கொடுக்கலாம். ஆனால், உண்மையை யாராலுமே மறைக்க முடியாதே அதையே வெற்றிமாறனும் எடுத்துரைத்திருக்கிறார்.
அனைத்து கேரக்டர்களும் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருப்பதில் வெற்றிமாறனின் பங்கு அதிகமாகவே தெரிகிறது. பல வருடங்களுக்குப் பின், விடுதலை படத்தினை பார்க்கும் மனிதர்களுக்கு நமது முன்னோர்களின் வலியும் வேதனையும் அதற்காக அவர்கள் கண்ட முடிவுகளும் என கண்முன்னே படைக்க இப்படைப்பு ஒரு வரலாறாக இருக்கும். இது ஒரு பாடம் என்று தான் சொல்ல வேண்டும்.
இளையராஜாவின் பாடல் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்ட நிலையில், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும்பலம் தான். மேலும், வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை நம் முன்னால் நடப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்துவிட்டார்.
விடுதலை பாகம் 2 – வலியும் விடையும்.