ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.
படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த கதைக்கு ‘காட்டேரி ’ என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் அபிப்ராயமும் சொன்னார். அந்த தலைப்பு எனக்கும் பிடித்திருந்தது. கதைக்கும் ஏற்றதாக இருந்தது.
இந்த படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கும் திட்டமிருந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாததால், தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம். அதனால் வைபவ் நாயகன் ஆனார். அவருக்கு ஜோடியாக சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு நாயகிகள் ஒப்பந்தமானார்கள்.
இதில் சற்று சுயநலமிக்க கேரக்டரில் சோனம் பஜ்வா நடிக்கிறார். மன நல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் கதையில் இடம்பெறும் 1960 சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.
என்னுடைய முதல் படமான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் பிரபலமானது போல், இந்த படத்திலும் ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது. இதனால் இந்த காட்டேரியை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த காட்டேரி ரத்தம் குடிக்காத காமெடி பேய்.’ என்றார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.