Spotlightவிமர்சனங்கள்

காயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம் 3.25/5

தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “36 வயதினிலே” படத்தினை இயக்கிய ஆண்ட்ரூஸ், மலையாளத்தில் நிவின் பாலி, மோகன் லாலை வைத்து “காயம்குளம் கொச்சுன்னி” என்ற வரலாற்று படத்தை இயக்கியுள்ளார்.

கேரளாவில் 1800-களில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் எளிய மக்களுக்காக போராடிய ஒரு போராளியின் கதை.

வறுமையின் பிடியில் சிக்கிய தனது தந்தைக்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டதால், வேறு வழியின்றி தனது பத்து வயதிலேயே வேறு ஊருக்கு சென்று தஞ்சம் புகுகிறார் நிவின்பாலி (காயம்குளம் கொச்சுன்னி).

திருடவே கூடாது என வைராக்கியமாக இருக்கும் நிவின்பாலியை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்தும் சில மேல் ஜாதியினர், தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவருக்கு திருட்டு பட்டம் சூட்டி தண்டனை கிடைக்க செய்கின்றனர்.

அச்சமயத்தில் அரசாங்கத்தையே கதிகலக்கவைக்கும் மிகப்பெரிய கொள்ளையனான மோகன்லால் (இத்திக்கர பக்கி) நிவின்பாலியை காப்பாற்றி, ஏழைகளை காப்பாற்ற கொள்ளையடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவருக்கு பயிற்சி அளித்து கொள்ளையனாக மாற்றுகிறார்.

மிகப்பெரிய கொள்ளையனாக மாறும் நிவின் பாலி, ஆதிக்க மனம் படைத்தவர்களிடம் பொருட்களை கவர்ந்து ஏழைகளுக்கு உதவுகிறார். அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்… அவரை பிடிக்க தனிப்படை அமைக்கிறது அரசாங்கம். இறுதியாக சட்டம் ஜெயித்ததா.? நியாயம் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருப்பதிலும், கோபக்கார கொள்ளையனாக மாறுவதிலும் தனது கதாபாத்திர மாற்றத்தை வெகு அழகாக இயல்பான நடிப்பால் படம் முழுக்க வெளிப்படுத்தி இருக்கிறார் நிவின்பாலி.

முதன் முதலாக ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியிருக்கிறார் நிவின் பாலி. கடுமையான உழைப்பையும் கொடுத்து அதற்கான பயனையும் அடைந்திருக்கிறார்.

மோகன் லாலின் காட்சிகள் திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பில் உச்சம் தொடுகிறார்.

படத்தில் நடித்த அனைவரும் கதையோடு இணைந்த கதாபாத்திரம் தான். எம் எஸ் பாஸ்கரும் தனது நடிப்பின் ஆதிக்கத்தை காட்டியுள்ளார். ப்ரியா ஆனந்த், காட்சியில் அழகோடு, வீரியத்தையும் காட்டியிருக்கிறார்.

மேல் சாதி, கீழ் சாதி என்னும் சாதியின ஆதிக்கத்தையும் வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் ஒரு பலம் என்றால் அது ஒளிப்பதிவு தான். பினோத் பிரதான் இப்படத்திற்கான ஒளிப்பதிவை கச்சிதமாக செய்திருக்கிறார். கலை இயக்குனரின் வேலைப்பாடுகளும் அதிகம். கோபி சுந்தரின் இசையில் பின்னனி இசை மிரட்டல்.

மிகப்பெரிய பட்ஜெட்டில், ஒரு உண்மைக்கதையை இயக்கி தனது இயக்கத்திறனை செம்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

காயம்குளம் கொச்சுன்னி – 1800களில் ஒரு வீரனோடு பயணம் புரிந்த ஒரு அனுபவம்…

Facebook Comments

Related Articles

Back to top button