
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கிங் ஆஃப் கோதா”. படமானது மலையாளத்தில் உருவாக்கப்பட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.
கதைப்படி,
பல வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் மிக கொடூரமான சுட்டுத்தள்ளும் தண்டனை ஒரு இடத்தில் வழங்கப்பட்டு வந்தது. அந்த தண்டனை கொடுக்கப்படும் இடத்திற்குப் பெயர் தான் கோதா.
சுதந்திற்குப் பிறகு அந்த கோதா பகுதியில் சிலர் குடியேறி, அங்கு வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதி மக்களிடையே கஞ்சா, கடத்தல், கொலை இந்த பழக்கம் அதிகரிக்கிறது. இவற்றையெல்லாம் கண்ணன் பாய் என்ற ரெளடி செய்து வருகிறார்.
இவற்றை தடுக்க அப்பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறார் பிரசன்னா. பிரசன்னா என்ன செய்தாலும், கண்ணன் பாயை தடுக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வதென்று அறியாது நி்ற்கும் பிரசன்னா, துல்கரை பற்றி அறிகிறார்.
கண்ணன் பாய் பயப்படும் ஒரே ஆள் அது துல்கர் சல்மானுக்காக மட்டும் தான். முன்பொரு காலத்தில் ரெளடியாக வலம் வந்த துல்கர், தனது காதலிக்காக போதைபொருள் கடத்தலை நிறுத்திவிடுகிறார். பின், காதலி ஏமாற்றி விட எதுவும் வேண்டாம் என்ற கோதா பகுதியை விட்டே வெளியேறிவிடுகிறார்.
துல்கரை வைத்து கண்ணன் பாயை பிரசன்னா அழித்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதையும் தனி ஒருவனாக தன் தோளில் சுமந்து நிற்கிறார் துல்கர் சல்மான். படம் முழுக்க மாஸ் காட்சிகள் நிறையவே தென்படுகிறது. வழக்கமான மாஸ், பி ஜி எம் என பில்டப் காட்சிகளே அதிகமாக இப்படத்தை ஆக்கிரமித்திருக்கிறது.
நட்பு, காதல் இரண்டையும் இணைத்து வழக்கமான படமாகவே இயக்குனர் இப்படத்தை கொடுத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் பெரிதான ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான பணிகளை மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
துல்கரின் ஆக்டிங், மற்ற படங்களில் இருந்து இப்படத்தில் வேறுபட்டு நிற்கிறது. சற்று மாஸான ஆக்டிங்கை கொடுத்து அசரடித்திருக்கிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதான பலமாக வந்து நிற்கிறது.
பல எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் நிற்கிறது.
எதுவாயினும்,
துல்கர் சல்மானுக்காக கொண்டாடப்படலாம் இந்த “கிங் ஆஃப் கோதா”வை..