
நிதின் வேமபட்டி இயக்கத்தில் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி மற்றும் பலரும் நடிக்க உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் கூரன்.
படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சித்தார்த் விபின். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மார்டின் தன்ராஜ்.
கதைக்குள் பயணித்துவிடலாம்..
கொடைக்கானல் சாலையில் ஒருதாய் நாய் தனது குட்டி நாயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில், தாறுமாறாக ஓடிய கார் ஒன்று குட்டி நாய் மீது ஏற்றி அதனை கொன்று விட, காரும் நிற்காமல் சென்று விடுகிறது.
இதனால், தாய்நாய் மிகவும் கவலையில் இருக்க, இந்த விபத்துக்கு நியாயம் கேட்டு காவல்நிலையம் செல்கிறது தாய் நாய். அங்கு யாரும் இந்த நாயின் வேதனையை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பிரபல வக்கீலாக வரும் எஸ் ஏ சி’யிடம் தனது மனக்குமுறலை தனது சோகத்தை தாய் நாய் வெளிப்படுத்த, ஒரு வழியாக எஸ் ஏ சி அதன் வலியை புரிந்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வாதாடி தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க முனைகிறார் எஸ் ஏ சி. அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் கதை.
படத்தின் முதன்மை கதாபாத்திரமான வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, உடல் மொழி மற்றும் நிதானமான நடிப்பு பாராட்டத்தக்கது. நீதிமன்றத்தில் தனது வாதத்தின் மூலம், நாயின் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்வையாளர்களுக்கு தெளிவாக கடத்தியிருக்கிறார். இருந்தாலும், ஆங்காங்கே அவரால் முன்பு போல நடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் நமக்குள் எழாமல் இல்லை.
ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சிறப்பாக விளங்குகிறது. பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் படி, நாய் அதன் பாத்திரத்தை மிகவும் நம்பிக்கையுடன் நிறைவேற்றியிருக்கிறது.
நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா, வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியன், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் போன்றோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், கதைக்கு என்ன தேவையோ அதை தெளிவாக கொடுத்திருக்கிறார். நாயின் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.. இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் கதைக்களத்திற்கு ஏற்ப உணர்ச்சிகளை ஊட்டியிருக்கிறார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, நாய் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சமம் என்ற கருத்தை தனது திரைக்கதை மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு நாய் என்றாலும், அதுவும் தாய் தானே என்ற தோற்றத்தை கொண்டு வந்து தாய் நாய்க்குள் இருக்கும் வலியையும் வேதனையையும் நமக்குள்ளும் கடத்திவிட்டார் இயக்குனர்.
”கூரன்” – தமிழ் சினிமாவில் அவ்வப்போது கிடைக்கும் அரிய வகை படைப்பு..