Spotlightவிமர்சனங்கள்

சுழல் 2 – தி வோர்டெக்ஸ் – விமர்சனம் 3.5/5

புஷ்கர் & காயத்ரி எழுத்து மற்றும் உருவாக்கத்தில் பிரம்மா & சர்ஜூன் இருவரின் இயக்கத்தில் உருவாகி ப்ரைம் வீடியோவில் வெளிவந்திருக்கும் இணையத் தொடர் தான் “சுழல் 2 – தி வோர்டெக்ஸ்”.

இத்தொடரில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லா, சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கெளரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவானி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்தொடரினை ஆபிரகாம் ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பினை ரிச்சர்ட் கெவின் கவனித்திருக்கிறார்.

கதைக்குள் பயணிக்கலாம்…

சுழல் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை நகர ஆரம்பிக்கிறது. கொலை செய்த குற்றத்திற்காக சிறை செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ஆதரவாக வழக்கை எடுத்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார் லால்.

ஓரிரு வாரங்களில் தீர்ப்பு கொடுக்கப்படும் என நீதிபதி கூறிவிடுகிறார். வக்கீலான லாலை ஒரு அப்பாவாக பார்க்கிறார் கதிர். சிறுவயதிலிருந்தே லால் தான் கதிரை படிக்க வைத்திருக்கிறார்.

கதிரை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார் லால். அங்கு திருவிழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது.

கிராமத்திற்குச் சென்றதும் அன்றிரவு தான் காட்டேஜ் செல்வதாக கூறிச் செல்கிறார் லால். மறுநாள், கதிர் அந்த காட்டேஜ் சென்று பார்க்கும் போது லால் கொல்லப்பட்டு கிடக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியாகிறார் கதிர்.

அங்கு போலீஸ் அதிகாரியாக வருபவர் வழக்கை கதிரே விசாரிக்கட்டும் என்று கூறி விடுகிறார். லோக்கல் இன்ஸ்பெக்டர் சரவணன் கதிருக்கு உதவி புரிகிறார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொலை நடந்த இடத்தில் கையில் துப்பாக்கியோடு கைது செய்யப்படுகிறார் கெளரி கிஷன். இந்நிலையில், அதிலிருந்து ஓரிரு நாட்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து சுமார் 7 பெண்கள் தான் தான் லாலை சுட்டுக் கொன்றதாக வெவ்வேறு காவல்நிலையத்தில் சரணடைகின்றனர்.

மொத்தமாக எட்டு பெண்கள் லாலை கொலை செய்யும் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகின்றனர்.

அதன்பிறகு, கதிர் என்ன மாதிரியான விசாரணையை கையில் எடுத்தார்.?? யார் இந்த கொலையை செய்தார்.??? எதற்காக லால் கொலை செய்யப்பட்டார்.???? லாலை கொலை செய்தது தாங்கள் தான் என்று 8 பெண்கள் சரணடைந்தது ஏன்.??? யார் இவர்கள்.??? உட்பட பல கேள்விகளுக்கு மீதமிருக்கும் தொடர்கள் விடை கொடுக்கின்றன.

கதையின் நாயகனாக தொடர் முழுவதும் பயணிக்கிறார் கதிர். சப் இன்ஸ்பெக்டராக முதல் தொடரில் கச்சிதமாக நடித்து தனது நடிப்பின் திறமையை முழுமையாக கொடுத்திருந்த கதிர், இந்த தொடரிலும் தனது அசாத்திய நடிப்புத் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் கதிர். தனது இன்வஸ்டிகேஷன் திறமையை திறமையாக கையாண்ட நடிப்பில் நச்சென அக்கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார் கதிர். தனது சக்ரவர்த்தி கதாபாத்திரத்தில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.

முதல் சீசனில் தொடர் முழுவதும் கதையின் நாயகியாகவே பயணித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த சீசனில் பெரிதான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஒரு சில காட்சிகளை வைத்தாக வேண்டுமே என்று கடமைக்கு வைத்தாற் போல காட்சிகள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொடுத்ததை நீட்டாக செய்து முடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

மேலும், தொடரில் நடித்த எட்டு பெண்களும் தங்களது கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்து நடித்துள்ளனர். தசரா விழாவில் எட்டு அம்மன்களும் சேர்ந்து அரக்கனை பலி வாங்குவது போன்று, எட்டுப் பெண்களும் சேர்ந்து அரக்கனை என்ன செய்தார்கள் என்பதை இந்த சீசனின் மூலமாக வைத்து கதையை நகர்த்திச் சென்றிருக்கின்றனர் இயக்குனர் இருவரும்.

நடிகர் லால், தனது அனுபவ நடிப்பாலும் தனது குரலாலும் தனது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறார். எந்த படத்திலும் இதுவரை நடித்திராத, கொடுத்திராத நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகர் சரவணன். போலீஸ் கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடித்து கொடுத்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்று விட்டார் சரவணன்.

மஞ்சிமா மோகன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மஞ்சிமாவை பெரிதளவில் பாராட்டலாம். கயல் சந்திரனின் நடிப்பையும் பாராட்டலாம்.

மேலும், தொடரில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது கேரக்டர்களின் பலம் புரிந்து அக்கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரின் எழுத்து மற்றும் உருவாக்கம், நல்லதொரு முயற்சியாக தென்பட்டது. வசனங்கள் ஆங்காங்கே கூர்ந்து கவனிக்குபடியாக இருந்தது.

இயக்குனர் பிரம்மாவின் இயக்கம் ஒரு படி மேல் நின்று திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

தொடரின் நடுவில் கதை தன் போக்கை விட்டு வேறு ஒரு பக்கம் சென்று கொண்டிருந்ததை சற்று கவனித்திருக்கலாம். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

சாம் சி எஸ்’ன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது.,

ஒளிப்பதிவு இத்தொடருக்கு மற்றொரு தூண் தான். திருவிழா காட்சிகளை மிகக் கட்சிதமாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சுழல் 2 – தி வோர்டெக்ஸ் – சில குறைகள் எட்டிப் பார்த்தாலும் நிறைகள் நிறைய உள்ளன..

Facebook Comments

Related Articles

Back to top button