
8 தோட்டாக்கள் படத்தினை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து குருதி ஆட்டம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வந்தது.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் நிறைவேற்றினாரா இல்லையா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
நாயகன் அதர்வா கபாடி வீரர். தனது அணியை வைத்து மற்ற அணியை துவம்சம் செய்கிறார். இதனால் பல எதிரிகளை கபாடி போட்டியினால் சம்பாதிக்கிறார்.
ஏரியாவின் லோக்கல் தாதாவாக வருகிறார் ராதிகா. இவரது மகனுக்கும் அதர்வாவிற்கும் அடிக்கடி மோதல் நிலவுகிறது. ஒருகட்டத்தில், அதர்வா ஜெயிலுக்கு செல்லும் போது, ராதிகாவின் மகனே அவரை ஜாமீனில் வெளியில் எடுக்கிறார்.
இருவரும் நண்பர்களாகின்றனர். இது பிடிக்காத சிலர், ராதிகாவின் மகனோடு சேர்த்து ராதிகாவையும் கொலை செய்ய முயல்கின்றனர்.
ராதிகாவின் மகனையும் கொலை செய்கின்றனர். தனது நண்பனை கொலை செய்தவர்களை அதர்வா பழி வாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அதர்வா ஆக்ஷன் ஹீரோவிற்கு பெயர் போனவர். இப்படத்திலும் தனது ஒட்டுமொத்த திறமையையும் ஆக்ஷனில் மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக ப்ரியா பவானி சங்கருக்கு பெரிதான காட்சிகள் கொடுக்கப்படாததால் அவருக்கான ஸ்கோப் எதுவும் இல்லாமல் படம் நகர்கிறது.
ராதிகா தன்னை பெரிய தாதாவாக முயற்சித்திருக்கிறாரே தவிர, அதில் அவர் பொருத்தமாக இல்லை என்பது தான் உண்மையான நிதர்சனம் .
ராதாரவியின் நடிப்பு ஆங்காங்கே ரசிக்க வைத்திருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தினை பார்ப்பதற்கு சற்று ஆறுதலாக அமைந்தது. மற்றபடி கதை, திரைக்கதை என அனைத்தும் படத்திற்கு பெரும் பலவீனம் தான்.
அதிலும் எடிட்டிங்க் படத்திற்கு ஒட்டாத ஒன்று, ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சியோடு ஒன்றாமல் இருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.
நண்பனை கொலை செய்யும் போது அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, நின்று கொண்டே டேய் என்று கத்துவதும், அதன் பிறகு நண்பனை இழந்துவிட்டோமே என்று கதறி அழுவதும் என ஆங்காங்கே ஒரு சில காட்சிகளை காணும் போது நமக்கு சிரிப்பு வராமல் இல்லை. “நம்பி வந்ததுக்கு நீங்க பண்ட்ற வேலையா” என்று தான் இயக்குனர் ஸ்ரீ கணேசனிடம் கேட்க தோன்றுகிறது.
எட்டு தோட்டாக்கள் படத்தினை எடுத்த இயக்குனர் அடுத்த படைப்பு இதுதான் என்று நம்பி வந்தால் உங்களுக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே நிகழும்.
காட்சிக்கு காட்சி சோதனை மட்டுமே.. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ராதிகா வீல் சேரில் இருந்துகொண்டே சம்பவம் செய்வதெல்லாம், என்ன மாதிரியான சோதனை என்று தான் நமக்கு புரியவில்லை.
படத்தின் ஒளிப்பதிவோ யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலோ பின்னணி இசையோ பெரிதான தாக்கத்தை எந்த இடத்திலும் ஏற்படுத்தவில்லை.
குருதி ஆட்டம் – ஆள விடுங்கப்பா சாமிகளா..