
வெற்றி செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “எண்ணித்துணிக”. ஜெய் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், அதற்கான அங்கீகாரம் என்னவோ இன்று வரை கிடைக்காமல் தான் இருக்கிறது. அப்படியான அங்கீகாரம் இப்படமாவது பெற்றுத் தந்ததா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
நாயகன் ஜெய்’க்கு அப்பா மட்டுமே என்பதால், அப்பா மீது மகனும், மகன் மீது அப்பாவும் அதீத பாசம் வைத்திருக்கின்றனர். ஜெய் மற்றும் அதுல்யா ரவி இருவரும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் க்ரீன் சிக்னல் கொடுத்து விடுகின்றனர்.
திருமணத்திற்கு நகை எடுக்க ஜுவல்லரி ஒன்றிற்கு வருகின்றனர் அதுல்யாவும் ஜெய்யும்.
தனதுகுழந்தையின் ஆப்ரேஷனுக்காக நகைகளை அடமானம் வைக்க அதே ஜுவல்லரிக்கு வருகின்றனர் அஞ்சலி நாயரும் அவரது கணவரும்.
சுமார் 2000 கோடி மதிப்பிலான வைர நகைகளைஅதே ஜுவல்லரியில் வைத்திருக்கிறார் அமைச்சரான சுனில். இந்த வைரத்தை ஐவர் கும்பல், ஒன்று கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறது.
ஒரே சமயத்தில் இச்சம்பவம் அனைத்தும் நடைபெறுவதால் மூன்று கொலையும் அதே ஜுவல்லரியில் நடைபெற்று விடுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் வைரமும் தவறிவிடுகிறது.
இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஜெய் எப்படி சிக்குகிறார்.? இதனால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது.? இதுதான் படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஜெய், தன் மனதிற்குள் விஜய் என்று நினைத்துக் கொண்டார் போலும்., ஒவ்வொரு காட்சிக்கும் காட்சிக்கு மீறிய நடிப்பைக் கொடுத்து நம்மை கடுப்பேற்றியிருக்கிறார்.
தன்னை மாஸ் நடிகர் என்று காட்டிக் கொண்டார் போலும், ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் மாஸ் கொடுத்துக் கொண்டே சண்டையிடுகிறார். ஒருகட்டத்தில் ”ஆளை விட்ருங்க சாமி” என்று தான் கூறத் தோன்றியது.
அஞ்சலி நாயர் என்று பெயர் கொண்ட அஞ்சலி, ஆங்காங்கே ஓவர் ஆக்டிங்க் கொடுத்து அந்த காட்சிக்கு மீறிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
முதல் பாதியில் நீண்ட சோதனைகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இன்னும் பெரிதாகவே காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.
கொலை, கொள்ளை என இரண்டையும் மையப்படுத்தி காட்சிகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் இடைவேளையில் ட்விஸ்ட்டை கொடுத்த இயக்குனர், அதன் பிறகு வேகத்தை ஏற்றியிருந்தால் படம் வீறு கொண்டு நடைபோட்டிருக்கும்.
எண்ணித்துணிக – ஒருமுறை துணிந்து செல்க..




