இயக்கம்: N.P. இஸ்மாயில்
ஒளிப்பதிவு: சங்கர் செல்வராஜ்
இசை: JIT
படத்தொகுப்பு: நாகராஜன்
தயாரிப்பாளர்: ஆயிஷா அக்மல்
கதைப்படி,
திண்டுக்கல் அருகே பழனியில் வசித்து வருகிறார் நாயகன் சரவணன். அங்குள்ள வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவது, பால் வியாபாரம் செய்து வருவது என சில வேலைகள் செய்து வருகிறார் சரவணன்.
அதே சமயம், வட்டி தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார். இந்நிலையில், மர்மமான முறையில் அப்பெண் வீட்டில் இறந்து கிடக்கிறார்.
இந்த கொலையை தொழிலதிபர் தான் செய்திருப்பார் என்று அக்கம் பக்கத்தினர் கூற, போலீஸ் அவரை தீவிரமாக தேடி வருகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபரை அடித்தேக் கொல்கிறார் சரவணன்.
அதே சமயம், அந்த பெண்ணையும் தான்தான் கொன்றதாகவும் கூறுகிறார் சரவணன். எதற்காக சரவணன் இந்த கொலையை செய்கிறார்.? அவரின் பின்புலம் என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
ராட்சசன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகர் தான் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது மகள் மீது அன்பை வெளிப்படுத்தும் இடமாக இருக்கட்டும், தனக்கு துரோகம் செய்தவர்களை பழி வாங்கும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது நடிப்பு ராட்சசனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் பக்காவான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்.
மேலும், படத்தில் எஸ் ஐ கதாபாத்திரத்தில் நடித்தவர், சரவணனின் மனைவியாக நடித்தவர், தொழிலதிபர் என பலரும் தங்களது கேரக்டர்களை மிக பொருத்தமாக பொருந்தி நடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சிக்கான நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். அநேக இடங்களில் கத்தியை (எடிட்) இன்னும் ஷார்ப்பாக போட்டிருக்கலாம்.
சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
JIT’யின் இசையில் பின்னணி இசை கதையோடு பயணம் புரிந்து நம்மையும் கதைக்குள் பயணிக்க வைத்துவிட்டது.
அழகான கதையை கையில் எடுத்து அதை நல்லதொரு படைப்பாகவும் படைத்திருக்கிறார் இயக்குனர் இஸ்மாயில். தினசரி நாளிதழில் நாம் கண்டு கடந்து போகும் செய்தியாக மாறி விட்ட இக்கதை, ஒருவனின் வாழ்வியலில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் இயக்குனர் இஸ்மாயில்.
”திரும்பி வருவேன்
திருந்தி வருவேன்னு நினைக்காத…” இந்த ஒற்றை வசனத்துக்காகவே இயக்குனரை பெரிதாகவே பாராட்டலாம்…
குற்றப் பின்னணி – பாசமுள்ள தந்தை..