அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே கார்த்திகேயன் இவர்களின் இயக்கத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஹிட் லிஸ்ட்”
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம் சரண். மேலும் இசையமைத்திருக்கிறார் சி சத்யா.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தனது ஆர் கே செல்லுலாயிட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணப்பட்டுவிடலாம்…
அம்மா சித்தாரா மற்றும் தங்கை அபி நக்ஷத்ராவோடு மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வரும் ஐடி இஞ்சினியர் தான் நம்ம நாயகன் விஜய் கனிஷ்கா.
எந்த உயிரையும் துன்புறுத்தாமல் வாழும் வாழ்க்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து வருபவர் விஜய் கனிஷ்கா.
இந்நிலையில், விஜய் கனிஷ்காவிற்கு மர்மமான முறையில் போன் அழைப்பு ஒன்று வருகிறது. அதில் பேசும் நபர், விஜய் கனிஷ்காவின் அம்மா மற்றும் சகோதரியை கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சயடையும் விஜய் கனிஷ்கா, போலீஸ் உயரதிகாரியான சரத்குமாரிடம் செல்கிறார். இந்த வழக்கை எடுத்து விசாரிக்கிறார் சரத்குமார்.
தொடர்ந்து அம்மா மற்றும் சகோதரியை விட வேண்டுமென்றால், வட சென்னையில் மிகப்பெரும் ரெளடியாக வலம் வரும் கருடன் ராமை கொலை செய்ய வேண்டும் என்று ஆர்டர் செய்கிறார் அந்த மர்ம நபர்.
ராமை கொலை செய்யவில்லை என்றால் அம்மாவை கொலை செய்து விடுவேன் என்று விஜய் கனிஷ்காவை மிரட்ட, தனது அம்மாவின் உயிரைக் காப்பாற்ற ராமை கொலை செய்துவிடுகிறார் விஜய் கனிஷ்கா.
இதோடு விடாமல், மருத்துவராக வரும் கெளதம் கார்த்திக்கையும் கொலை செய்ய வேண்டும் என்று அடுத்த டாஸ்க்கையும் கொடுக்கிறார் அந்த மர்ம நபர்.
தனது குடும்பத்தை விஜய் கனிஷ்கா காப்பாற்றினாரா இல்லையா.? எதற்காக அந்த மர்ம நபர் இந்த கொலைகளை செய்ய சொல்கிறார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விஜய் கனிஷ்காவிற்கு இது தான் முதல் படம் என்று கூறும் அளவிற்கு இல்லாமல், ஒரு அனுபவ நடிகர் எப்படியான நடிப்பைக் கொடுப்பாரோ அப்படியான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய் கனிஷ்கா.
இந்த இடத்தில் இந்த அளவு நடிப்பு போதும் என்று இருக்கும் காட்சிகளிலும் அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பிரபல இயக்குனர் விக்ரமின் மகனான இவர், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக உயர்ந்து நிற்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அபி நக்ஷத்ரா மற்றும் சித்தாராவும் தங்களுக்கான நடிப்பை அளவாக கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ஸ்மிருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருந்தார்கள்.
கொரோனா காலக்கட்டத்தில் வெளிப்பட்ட மனிதம் மற்றும் ஊழல் இரண்டையும் ஒரு நூலாக எடுத்து அதற்கு உயிர் கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் இந்த இயக்குனர்கள்.
சிறப்பான திரைக்கதைக் கொண்டு படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். தமிழ் சினிமாவிற்கு ஒரு காதல் நாயகனை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார்கள் இயக்குனர்கள்.
சத்யாவின் பின்னணி இசை படத்தை ஒரு தளத்திற்கு மேல் எடுத்துச் சென்று நிறுத்தியிருக்கிறது. சரத்குமாரின் சண்டைக் காட்சி படத்திற்கு மேலும் பூஸ்டாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.
வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர்கள் அதை திறம்பட கையாண்டிருக்கின்றனர்.
ஹிட் லிஸ்ட் – பெர்ஃபெக்ட்