பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் “லக்ஷ்மி”. நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ளது.
“லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம். நடனம் என்பது ஒரு சிறந்த கலை வெளிப்பாடாகும். பிரபு தேவா சாரை தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும். ‘லக்ஷ்மி’ நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். படத்தில் என்ன இருக்கும் என்ற ஒரு ஆவலை டிரைலர் ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். பேபி டித்யா சூப்பர் சென்சேஷனல் சிஷ்யையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் உண்மையில் திரையில் கலக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ்க்கு ஒரு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார் நடனப்புயல் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். நிரவ்ஷா நடன காட்சிகளை மிகச்சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.
இந்த படத்திலும் எடிட்டர் ஆண்டனி தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். “லட்சுமி” நடனம் சர்வதேச தரத்திலும், எமோஷன் இந்திய தரத்திலும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று படக்குழுவாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி நல்லப்பா மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் படத்தை தயாரித்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் விஜய் தன்னம்பிக்கையோடு.