Spotlightசினிமா

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் வழக்கறிஞர்!

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.

“இருட்டாக இருக்கிறதே என்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது உயர்வானது “என்பதைத் தன் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறது ‘அகவொளி மக்கள் நல இயக்கம்’.

இதன் நிறுவனர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் ‘திட்டி வாசல் ‘படத்தின் இயக்குநர் பிரதாப் முரளி, செயலாளர் முனுசாமி, நத்தர்ஷா,
சமன்த்ராய், சுகதேவ், பிடல் காஸ்ட்ரோ, ஹரிஷ், அருண், வசந்த் மற்றும் தன்னார்வலர்கள்.

இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள். நாட்டின் அவலங்களில் பிச்சை எடுப்பது ஒன்று என்பதை உணர்ந்து பிச்சை எடுப்பவர்களை அணுகி அவர்களின் பின்னணி அறிந்து முதியோர் இல்லத்தில் சேர்ப்பது சிறு சிறு கடைகள் வைக்க உதவுவது, வேலைக்கு அமர்த்துவது, அரசு சலுகைகள் பெற்று தருவது என்று அவர்களை மறு பிறவி எடுக்க வைத்துள்ளார்கள்.

இப்படி இதுவரை 50 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதே போல மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் சாலையோர சிறு கடைகள் வைத்து உதவியதோடு நிற்காமல், பத்து ஆண்டுகளில் CONFLUXLIVE என்ற நிறுவனம் மூலம் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது ‘அகவொளி’ இயக்கம்.

சென்னை வெள்ளம், தானே புயல், வர்தா புயல், கேரள வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் வந்தபோது உதவியுள்ள இந்த இயக்கம், இப்போது கஜா புயல் பாதிப்புக்குப் பின் களமிறங்கியுள்ளது

டெல்டா மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன் ‘நம்ம விழுப்புரம்’, ‘நம்ம கடலூர், ‘திருச்சி SRM கல்லூரி மாணவர்களுடன் இணைந்து 1000 மரக்கன்றுகள் நட்டு களப்பணியாற்றியுள்ளனர்கள். அந்நிகழ்வில் ‘தேசிய விருது’ பெற்ற திரைப்பட இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு இருக்கிறார்.

வேதாரண்யம் பகுதிக்கும் 800 தென்னங்கன்றுகள் அனுப்பி தன்னார்வலர்கள் மூலம் அவற்றை நடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது பற்றி வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் போது” இந்த இயக்கத்தை நான் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடங்கினேன் . இயக்குநர்
பிரதாப் முரளி, வழக்கறிஞர்கள், மென்பொருளார்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றோம். எங்களோடு மேலும் பல ஈரமுள்ள இதயங்கள் இணைந்து இருக்கின்றன என்கிறார்.

“பாசமுள்ள பார்வையிேலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்” என்பது வெறும் திரைப்பாடல் அல்ல. வாழ்வில் நிரூபணமாகியுள்ள உண்மையும் கூட எனலாம்.

பிச்சையெடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நினைத்தால் அவர்கள் பிச்சை எடுக்கும் இடம், இரவில் தங்கும் இடம், புகைப்படம், வயது, ஏதேனும் குறைபாடுகள், முடிந்தால் அவர்களிடம் அன்புடன் பேசி அவர்களை பற்றிய நெகிழ்வான விவரங்களை கேட்டறிந்து உங்கள் விபரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button