
பிரபல நடிகரான ஸ்ரீநாத் இயக்கத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத், யோகிபாபு, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவணன் சுப்பையா, மாரிமுத்து, மதுசூதனன், மணிகண்டன் உள்ளிட்ட பிரபலங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லெக் பீஸ்”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மசானி. மேலும் இசையமைத்திருக்கிறார் BJORN SURRAO.
ஹீரோ சினிமாஸ் சார்பில் சி மணிகண்டன் படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்…
மிமிக்ரி செய்து பிழைப்பு நடத்தி வரும் ரமேஷ் திலக், ஜோசியம் கூறி பிழைப்பு நடத்தி வரும் கருணாகரன், பழைய மயிறுகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் மணிகண்டன், பேய்களை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஸ்ரீநாத் இவர்கள் நால்வரும் ”குடி”யால் சந்தித்து நண்பர்களாகி விடுகின்றனர்.
இவர்கள் கள்ள நோட்டு கொடுத்ததாக, பார் ஓனராக வரும் மொட்டை ராஜேந்திரன் நால்வரையும் தூக்கி விடுகிறார். தனது அடியாட்களிடம் நால்வரையும் கொன்று விடுங்கள் என்றும் கூறிவிடுகிறார் ராஜேந்திரன்.
இச்சமயத்தில், இன்னும் சற்று நேரத்தில் நீங்களே இறந்துவிடுவீர்கள் என்று மொட்டை ராஜேந்திரனை பார்த்து, கருணாகரன் கூற, மொட்டை ராஜேந்திரன் சிரிக்கிறார்.
அதிலிருந்து சற்று நேரத்தில் அங்கு, போலீஸான மைம் கோபியும் மாரிமுத்துவும் வருகிறார்கள். நால்வரையும் தனி அறையில் அடைத்து விடுகிறார் மொட்டை ராஜேந்திரன்.
தன்னை மைம் கோபி கொல்ல வந்திருப்பதை அறிந்து கொள்கிறார் மொட்டை ராஜேந்திரன். இந்த சமயத்தில் ஹெல்மெட் அணிந்த இருவர் அங்கிருந்த மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உட்பட அனைவரையும் கொன்று விடுகின்றனர். இந்த கொலைகளை நேரில் பார்த்து விடுகின்றனர் கருணாகரன் டீம்.
அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர் கருணாகரனும் அவரது நண்பர்களும். இச்சமயத்தில், இந்த கொலைகளை எல்லாம் செய்தது நால்வர் என நினைத்து போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.
ஹெல்மெட் அணிந்து வந்த அந்த இருவர் யார்.? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.?? ரவி மரியாவிற்கும் மற்றும் மதுசூதனனுக்கும் இதில் என்ன தொடர்பு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் மற்றும் மணிகண்டன் நால்வரும் கதைக்கு என்ன தேவையோ அதை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள். நால்வரும் இணைந்து பல இடங்களில் நம்மை நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார்கள். ரமேஷ் திலக் மற்றும் கருணாகரன் இருவரும் டைமிங் காமெடிகள் படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
மேலும், படத்தில் நடித்த சீனியர் நடிகர்களான ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவணன் சுப்பையா, மாரிமுத்து, மதுசூதனன் உள்ளிட்டவர்களும் தங்களது கேரக்டர்களை மீட்டர் அறிந்து அளவாக செய்திருக்கிறார்கள்.
நடிகர் யோகிபாபு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் தோன்றும் காட்சிகளிலெல்லாம் காமெடி சரவெடியாக தான் இருக்கிறது.
படத்தில் 70 சதவீதம் காமெடி, கலாட்டா, அரட்டை என நிரம்பி வழிந்தாலும், படத்தில் ஒரு சமூக விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றையும் சொல்ல மறக்கவில்லை இயக்குனர் ஸ்ரீநாத்.
காமெடிக்கு இன்னும் சற்றும் மெனக்கெடலை அதிகமாகவே கொடுத்திருக்கலாம்.
பாடல் மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பேசி தன்னால் முடிந்த ஒரு குரலை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நாளுக்கு நாள் பெண்களின் சுதந்திரம் பற்றியான கேள்விகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இவ்வேளையில், இம்மாதிரியான படங்கள் ஒரு விழிப்புணர்வாக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இயக்குனர் ஸ்ரீநாத் எடுத்த முயற்சிக்கு பெரிதான பாராட்டுகள்.