Spotlightவிமர்சனங்கள்

லிப்ட் – விமர்சனம் 3.5/5

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடித்து வெளிவரும் முதல் படம் ‘லிப்ட்’. இப்படத்தில் அம்ரிதா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.

கதைப்படி,

நாயகன் கவின் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் அன்று தான் புதிதாக பணியில் அமர்கிறார். அதே நிறுவனத்தில், HR’ஆக பணிபுரிகிறார் அம்ரிதா.

முதல்நாள் பணி முடிந்து, வீட்டிற்கு கிளம்பிய கவினிடம் இன்னும் சிறிது வேலை இருக்கிறது. முடித்துவிட்டு செல்லும்படி மேல் அதிகாரி கூற, சரி என்று செய்கிறார் கவின்.

இரவு பத்து மணி ஆனதும், வேலை முடித்துவிட்டு கிளம்புகிறார். அந்நேரத்தில் அந்த கட்டிடத்தில் எவரும் இல்லை. லிப்ட்டில் கீழிறங்க முயற்சி செய்கிறார் கவின். அந்த கட்டிடத்தில் இருக்கும் பேய், லிப்ட் மூலம் தனது பயமுறுத்தும் வேலையை காட்ட துவங்குகிறது.

அதே சமயத்தில், வேறு ஒரு அறையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் நாயகி அம்ரிதா. இருவரும் அந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இவர்களை கொல்ல நினைக்கும் அந்த பேய் யார்.? அந்த பில்டிங்கில் இருந்து இருவரும் உயிரோடு தப்பித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கவின் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் பயத்தினை கண்களில் கொண்டு வந்து பார்க்கும் பார்வையாளர்களையும் அதே பயத்துடன் இருக்க வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு காட்சிலும் வித்தியாசத்தை கொண்டு வந்திருக்கிறார். நாயகி அம்ரிதா அழகான தேவதையாக வந்திருக்கிறார். காட்சிகள் மிரட்டியிருக்கிறார். பதட்டம், பயம், யதார்த்தம் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இவர்கள் இருவரை தாங்கிச் செல்வதால் படத்தின் கதை முழுவதும் இவர்கள் மீது பயணப்படுகிறது. ஒரு இடத்தில் கூட தொய்வடையவிடாமல் அந்தவொரு பதட்டத்திலே இருவரும் நடித்தது பாராட்டுக்குறியது.

படத்தில் இயக்குனரின் வேலைப்பாட்டினை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். போகிற போக்கில் ஒரு ஹாரர் படம் என்றில்லாமல், இறுதியாக வைத்த காரணங்கள் கைதட்டல் கொடுக்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் சீட்டின் நுனியில் ரசிகர்களை உட்கார வைத்த பெருமை இயக்குனரையே சேரும்.

லிப்டில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, கவின் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் உண்மையாகவே பிரம்மிக்க வைத்தது. அப்போது வைக்கப்பட்ட காட்சிகள் இன்னமும் கண்களில் ஓடுகிறது. அந்த காட்சியில் கவினின் நடிப்பு “மனுஷன் பின்னிட்டாரு’ என்று தான் கூற வைத்தது.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவும் பின்னனி இசையும் தான். ஒவ்வொரு காட்சியமைப்பினையும் மெனக்கெடல் செய்து எடுத்தமைக்கு யுவா அவர்களுக்கு வாழ்த்துகள்.

பின்னனி இசையில், ஆங்காங்கே கொடுக்கப்பட்ட சைலண்ட் மியூசிக் அருமை.. இசையில் மிரட்டலாக கொடுத்து, படம் பார்ப்பவர்களை பதட்டமாக வைத்த பெருமை இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் அவர்களை சேரும்.

மதனின் எடிட்டிங்க் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “ஷார்ப்”.

பேய்களை வைத்து காமெடி அடித்துக் கொண்டு வரும் படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், உண்மையான பேய் படத்தை மிரட்டலான பேய் படத்தை பார்க்க வேண்டும் என்றால் இப்படத்திற்குச் செல்லலாம்.

அகோரமான காட்சிகள் எதுவுமில்லாமல், காட்சியமைப்பிலும் பின்னனி இசையிலுமே நம்மை படபடப்பாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

சுந்தர் & தாரா கதாபாத்திரத்தில் நடித்த இருவரும் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள் தான்.

திரையரங்கில் வந்திருந்தால், தனது ரசிகர்களுக்கு மிரட்டலான ஒரு விருந்தினை கொடுத்திருப்பார் கவின்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது.

லிப்ட் – நம்பி பார்க்கலாம்..

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close