Spotlightவிமர்சனங்கள்

சிவக்குமாரின் சபதம் விமர்சனம் 2/5

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியிருக்கும் படம் தான் “சிவக்குமாரின் சபதம்”

காஞ்சிபுர நெசவாளர்களின் கதையை எடுத்துள்ளதாக ஆதி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். படத்தின் கதையில் அது எவ்வாறு உள்ளது என்பதை விமர்சனம் மூலம் கண்டு விடலாம்.

கதைப்படி,

பட்டு என்றால் அது காஞ்சிபுரம் பட்டு தான் என்று சொல்லும் அளவிற்கு காஞ்சிபுரத்தில் உள்ள பட்டிற்கு எப்போதுமே ஒரு மவுசு இருக்கதான் செய்யும். அப்படியான காஞ்சிபுரத்தில், பேர் சொல்லும் குடும்பத்திற்கு தலைவராக இருக்கிறார் நெசவுத் தொழிலுக்கு குருவாக விளங்கும் இளங்கோ குமணன் (வரதராஜன்).

இவரது பேரனாக வருகிறார் ஆதி. பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த சபதத்தின் காரணமாக சுமார் 20 வருடங்களாக தறி ஓட்டாமல் நெசவு தொழில் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் வரதராஜன்.

ஆதியின் சித்தப்பாவாக வரும் ப்ராங்க் ஸ்டார் ராகுல், சென்னையில் ஒரு பெரும் முதலாளியின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக வாழ்ந்து வருகிறார்.

ஊரில் பொறுப்பில்லாமல் இருக்கும் ஆதியை சென்னை அழைத்து, தனது மாமாவின் வீட்டிலேயே வேலைக்கு சேர்த்து விடுகிறார் சித்தப்பா.

முதலாளியின் தங்கை மகளை காதல் செய்கிறார் ஆதி. காதலும் கைகூடுகிறது. இந்நிலையில், ஆதியின் சித்தப்பாவாக வரும் ப்ராங்க் ஸ்டார் குடும்ப உறுப்பினர்களால் கலங்கப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்து துரத்தப்படுகிறார்.

இன்னும் ஒரு வருடத்தில் நாங்களும் பெரும் பணக்காரர்களாக மாறுவோம் என்று ”சிவக்குமார் சபதம்” கட்டுகிறார் ஆதி. இந்த சபதத்தில் அவர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

சிவக்குமார் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக வருகிறார் ஆதி. கதைக்களத்துக்கான கதையின் பலத்துக்கான ஹீரோவாக இவர் ஒரு காட்சியில் கூட தென்படவில்லை. ஹீரோ என்றால் நான்கு பாட்டுக்கு ஆட வேண்டும், மூன்று பைட்டுக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் போல. சண்டைக்காட்சியில், ரவுடிகளை ஏதோ பந்தை அடிப்பது போல் அடித்த காட்சிகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

காதல் காட்சியில் மட்டும் புகுந்து விளையாடியிருக்கிறார் ஆதி. ஆதியின் நண்பராக இறுதி வரை கூட பயணித்த கதிரின் காமெடிகள் ரசிக்கும் படியாக இருந்தது. ஒரு சில காமெடிகள் “எதுக்கு இது..??” என்று கேள்விகள் எழுப்பினாலும் பல காமெடிகள் நன்றாகவே உள்ளது.

நாயகியாக வரும் மாதுரி அழகாக இருக்கிறார். பாடலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் எட்டி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ஆதி.

படத்தின் முதல் பாதி முழுவதும் கதைக்குள் செல்லாமல், நான்கு பாட்டு வைத்து ரசிகர்களை வெறுப்படைய வைத்து விட்டார் ஆதி. இரண்டாம் பாதியில் துவங்கும் கதை, இரண்டாம் பாதியின் இறுதியில் தான் “இது தான் படத்தோட கதை போல” என கூற வைத்துள்ளார்.

கடைசி 15 நிமிடத்திற்கு கொடுத்த உழைப்பை படத்திற்கு முழுவதும் கொடுத்திருந்தால் காஞ்சிபுர நெசவாளர்களின் பெருமை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமையை ஆதி பெற்றிருந்திருப்பார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லையே.

இரண்டு டயலாக் மட்டும் வைத்து, காஞ்சிபுர நெசவாளர்களை பற்றிய படம் என்று சொல்வதை ஏற்க முடியாது ஆதி சார்.

விஜய் கார்த்திக் நடிப்பில் ஒரு வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி அசத்தியிருக்கிறார்.

சித்தப்பா கேரக்டரில் நடித்த ப்ராங்க் ஸ்டார் ஓவர் ஆக்டிங் கொடுத்து காட்சிகள் முழுவதுமாக வீணடித்திருக்கிறார்.

இவரை நினைத்து ஃபீல் பண்ணவா அல்லது சிரிக்கவா என ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்து அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு கலர்புல். பின்னனி இசை பெரிதாக எடுபடவில்லை.

மொத்தத்தில் சிவக்குமாரின் சபதம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஆதி பூர்த்தி செய்யவில்லை.

Facebook Comments

Related Articles

Back to top button