அங்கிதா ப்ரொடக்ஷன் சார்பில் முரளி தயாரிக்க விஹான் ஜாலி , சஹானா, எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் இவர்களின் நடிப்பில் ஜாலி பாண்டியன் இயக்கியிருக்கும் படம் தான் “லாக்டவுன் டைரி”..
கதைப்படி,
கர்நாடகாவில் கால் டாக்ஸி வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் நம்ம ஹீரோ விஹான். இவரின் மனைவியாக வருபவர் சஹானா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
திடீரென ஒருநாள் மகள் மயக்கம் அடைய, அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மருத்துவர்கள், சிறுமிக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் இரண்டு வாரத்தில் அகற்ற வேண்டும் என்று கூறி விடுகிறார்கள். தனது ஏழ்மையால் ஆப்ரேஷனுக்கு பணத்திற்கு என்ன செய்வதன்று விழிக்கிறார் விஹான்.
அடுத்தநாள், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் லாக்-டவுனை அறிவிக்கிறார் பிரதமர். இதனால், இன்னமும் வருமானத்திற்கு எதுவும் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார் விஹான். கடன் தொல்லையால் மிகவும் சிரமப்படுகிறார்.
பெரும் செல்வந்தரான ரிஷியின் மனைவியாக வரும் நேஹாவின் பழக்கம் விஹானுக்கு கிடைக்கிறது. ஒட்டுமொத்த கடனையும் தீர்ப்பதற்கு விஹானுக்கு பணம் கொடுக்கிறார் நேஹா.
உன்னால் எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று விஹானிடம் கூறுகிறார் நேஹா… தனது குழந்தையைக் காப்பாற்ற நேஹாவிடம் பணிந்தாரா விஹான்.?? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் விஹான், முதல் படம் என்பது போல் இல்லாமல் அனுபவ நடிகரின் நடிப்பு போன்ற ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே சில சில காட்சிகளில் இன்னும் சற்று பயிற்சி எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.., மகளுக்காகவும் மனைவிக்காகவும் போராடும் தருணத்தில் கண்கலங்க வைத்திருக்கிறார் விஹான்.
நாயகி சஹானா, பார்ப்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் காட்சிகளிலும் ஜொலித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது கணவனை தன் மகளுக்கு அனுப்பி வைக்கும் காட்சிகளில் மனம் உருக நடித்து அசர வைத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் எப்போதும் மிரட்டும் ரிஷி, இப்படத்தில் சற்று அடக்கி வாசித்திருக்கிறார். கொடூரமான வில்லன் போல் காட்டாமல், அமைதியான வில்லனாகவே காட்டியிருக்கிறார்கள். அழகால் கட்டிப் போடுகிறார் ரிஷியின் மனைவியாக வரும் நேஹா..
எம் எஸ் பாஸ்கர் மற்றும் மொட்டை ராஜேந்திரன் தங்களது அனுபவ நடிப்பால் கைதட்டல் பெறுகின்றனர். முத்துக்காளை இன்னும் சற்று மெனக்கெடல் செய்து தனது காமெடி காட்சிகளுக்கு மெருகேற்றம் செய்யலாம்.
ஜேசிகிஃப்ட் இசையில் லாக்டவுன் பாடல் ஆட்டம் போட வைத்துள்ளது. பின்னணி இசையில் இன்னும் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
தாஸின் ஒளிப்பதிவு கர்நாடகாவின் காட்சிகளை இன்னும் சற்று அழகாகவே காண்பிருத்திருக்கலாம்.. இரண்டாம் பாதியில் வந்த காதல் காட்சி ரசனை..
முதல் பாதி முழுவதும் லாக்டவுனால் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டான் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதி முழுவதும் காதலும், குடும்பமாகவும் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
அழகான காதலும், அழகான வாழ்வியலை காண்பித்தாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால், லாக்டவுன் இன்னும் அதிகமாகவே நம்மை ரசிக்க வைத்திருக்கலாம்., முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் மிகப்பெரும் இடைவெளி இருப்பதை காண முடிந்தது.,
லாக் டவுன் – லாக் செய்திருக்கலாம்…