Spotlightவிமர்சனங்கள்

விலங்கு – விமர்சனம் 4/5

புரூஸ்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் படம் தான் விலங்கு. தொடர்ந்து சில படங்கள் சறுக்கிய நிலையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விமலுக்கு இப்படம் மிக முக்கியமான ஒன்று தான். ”விலங்கு” இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் கை கொடுத்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.

கதைப்படி,

திருச்சியில் உள்ள வேம்பூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் விமல். அதே காவல் நிலையத்தில் பால சரவணன் போலீஸாகவும், முனீஸ்காந்த சப் இன்ஸ்பெக்டராகவும், ஆர் என் ஆர் மனோகர் இன்ஸ்பெக்டராகவும் வருகின்றனர்.

விமலின் நிறை மாத கர்ப்பிணியாக வருகிறார் இனியா. இப்படியாக துவங்குகிறது படம். வேம்பூர் சரகத்திற்கு உட்பட்ட ஒரு காட்டில் அழுகிய நிலையில் தலை துண்டாக்கப்பட்ட பிணம் ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது.

விமல், அந்த பிணத்தை கண்டு விசாரணையை துவக்குகிறார். சில நிமிடங்களில் பிணத்தின் தலை காணாமல் போய்விடுகிறது. இந்த செய்தி, மேலிட அதிகாரிகள் வரை செல்ல, வேம்பூர் காவல்நிலைய காவலர்கள் அனைவருக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. அதேசமயத்தில், காட்டிற்குள் மற்றொரு பிணமும் கிடைக்கிறது. இரண்டு பேரையும் கொன்றது யார்.? இது இரண்டோடு நின்றதா.? என கொலையாளியின் தேடுதல் வேட்டை தான் இந்த “விலங்கு”..

தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் விமல். களவாணி, வாகை சூடவா, படங்களுக்கு பிறகு விமல் தனது நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பரிதி என்ற கேரக்டரில் தோன்றிய விமல், தனக்கே உரித்தான உடல்மொழியில் நேர்த்தியான ஒரு நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கொலையாளியை தேடி அலையும் வேலையில், தனது பணி அதே நேரத்தில் மனைவிக்கு பிரசவம் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்ட விதம் அருமை. கதை நகரும்போது கதைக்கு உயிரோட்டத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் விமல்.

கொலையாளி யார் என்று தெரிந்தும் கதையின் ஓட்டத்தை எந்த இடத்திலும் தொய்வடையவிடாமல் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர். இயக்குனரை பார்த்து “இவ்வளவு திறமைய வச்சிகிட்டு எங்கப்பா இருந்த இத்தனை நாளா” என்று தான் கேட்க தோன்றுகிறது.

படத்தின் கதையை எடுத்துச் சென்ற விதம், ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம், வசனம் என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு முதற்காரணியாக அமைந்துள்ளது.

இதுவரை வெளிக்காட்டாத நடிப்புத் திறமையை காட்டியிருக்கிறார் பால சரவணன். நான் காமெடியனாக மட்டுமல்ல இப்படியும் நடிப்பேன் என நடிப்பில் மிரட்டியிருக்கிறார் பால சரவணன். படம் பார்க்கும் போது பால சரவணன் கேரக்டரை ஒருமுறையாவது திட்டினால், அதுதான் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி.

பெரிய ரோல் இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்து முடித்திருக்கிறார் இனியா. மற்றபடி, முனீஸ்காந்த், RNR மனோகர் இருவருக்கும் சரியான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிதும் ஈர்க்கப்பட்ட நடிகர் கிச்சா என்ற கதாபாத்திரத்தில் தோன்றியவர் தான். சாதாரண மனிதராக படத்தின் ஆரம்பத்தில் தோன்றி, 5-வது எபிசோடுகளில் இருந்து மொத்த கதையும் அவர் மேல் பயணிக்கிறது. பெரிய காட்சிகளையெல்லாம் சாதாரணமாக வந்து நடித்து முடித்திருக்கிறார் கிச்சா.

அடுத்தடுத்த நகர்வுகள், யாரும் யூகிக்க முடியா ட்விஸ்டுகள் என படத்தினை தொடர்ந்து சீட்டின் நுனியிலேயே அமர்ந்து பார்க்கும்படி செய்துவிட்டார் இயக்குனர்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. அநேக காட்சிகள் நீளமாக எடுக்கப்பட்டது படத்திற்கு பலம். கேரக்டர்களாகவே தங்களை கேமராவில் பதிய வைத்தது இப்படத்திற்கு பெரிய வெற்றி.

அஜீஷ் அவர்களின் பின்னனி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.படத்தின் ஆரம்பத்தில் இருட்டினில், அந்த காட்டிற்குள் கொடுத்த இசையை படம் முழுவதும் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.

கணேஷ் அவர்களின் எடிட்டிங்கும் பெரிதளவில் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறது. ஒரு நல்ல கதை அமைந்தால், மற்றவையெல்லாம் நல்லாதாகவே அமைந்து விடும் என்று கூறுவது போல இப்படத்திற்கு அனைத்தும் நல்லதாகவே அமைந்து விட்டது.

துரைராஜ் அவர்களின் ஆர்ட் பணிகள் கூர்ந்து கவனிக்கும் படியாக இருந்து. சிறப்பான வேலைப்பாடுகளை கொடுத்திருக்கிறார் துரைராஜ்.

இரண்டாவது படத்திலிருந்து பெரும் வெற்றியோடு தனது பயணத்தை துவங்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்

விலங்கு – நேர்த்தியான க்ரைம் த்ரில்லர்…

Facebook Comments

Related Articles

Back to top button