Spotlightவிமர்சனங்கள்

மகான் – விமர்சனம் 3.25/5

விக்ரம் & துருவ் விக்ரம் நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மகான்”. நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. தந்தை – மகன் இருவரும் ஒரே படத்தில் தோன்றியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் எட்டியது. எட்டிய எதிர்பார்ப்பை “மகான்” பூர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

சாராய ஒழிப்பிற்காக சிறை சென்று வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் விக்ரம். காந்தியின் கொள்கைகளை பின்பற்றி நடப்பதற்காக காந்தி மகான் என விக்ரமிற்கு பெயர் வைக்கப்படுகிறது.

எவ்வித கெட்டப் பழக்கமும் இல்லாமல் பள்ளி ஆசிரியராக வரும் விக்ரமிற்கு மனைவியாக வருகிறார் சிம்ரன். குழந்தை, மனைவி என வாழ்க்கையை வேண்டா வெறுப்பாக நடத்தி வருகிறார் மகான்.

ஒருநாள் மனைவி ஊருக்குச் செல்ல, தான் நினைத்தது போல் வாழ்ந்து விடுகிறார். சூதாட்டம், குடி, என ஒருநாள் முழுவதும் ஜாலியாக இருந்துவிடுகிறார் விக்ரம். மறுநாள் சிம்ரனுக்கு விஷயம் தெரிந்து விட, தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு கண்காணா இடத்திற்குச் சென்று விடுகிறார். சாராய வியாபாரியான பாபி சிம்ஹாவை சந்திக்கிறார் விக்ரம்.

பாபி சிம்ஹாவிற்கு பல ஐடியாவை கொடுத்து சாராய வியாபாரத்தை பெரிதாக்குகிறார் விக்ரம். தனது மனைவி, குழந்தையை நினைத்து தினமும் சாராயம் குடிக்கிறார் விக்ரம். வருடங்கள் கடந்து செல்ல. தமிழகத்தில் சாராய வியாபாரத்தில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைக்கின்றனர் விக்ரமும் பாபி சிம்ஹாவும்.

இந்த சாம்ராஜ்ஜியத்தை சாய்ப்பதற்காக வட மாநிலத்திலிருந்து தனி போலீஸ் படை ஒன்று தமிழகத்திற்கு வருகிறது. இந்த போலீஸ் படைக்கு தலைமையாக என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் துருவ் விக்ரம் வருகிறார்.

நான் தான் உங்க மகன் என்று கூறிக் கொண்டே, விக்ரமின் கையாளாக வரும் ஒருவரை என் கவுண்டரில் சுட்டுத் தள்ளுகிறார் துருவ்.

அதன் பிறகு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த “மகான்” படத்தின் மீதிக் கதை.

பல படங்களுக்குப் பிறகு விக்ரம் என்ற நடிப்பின் அரக்கனை இப்படத்தில் காணலாம். இந்த ஆளுக்கு வயசே ஆகாதா என்று கூறும் அளவிற்கு தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் விக்ரம். பள்ளி ஆசிரியராக தோன்றி, ஒரு சாராய வியாபாரியாக தோன்றி, ஒரு டானாக மாறும் தருணம் என பல காலகட்டத்தை பல விதமான உடல்வாகுவில் (Bodylanguage) கொடுத்து அசத்தியிருக்கிறார் விக்ரம். விக்ரமிற்கான இடம் விக்ரமிற்கே.. எவரும் அவருக்கான இடத்தை நிரப்ப இயலாது.

தந்தைக்கு நிகராக மகனுக்கும் இப்படத்தில் சரிசமமான திரைப் பங்களிப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மிகப்பெரும் சாராய வியாபாரியான விக்ரமின் மீது மகன் துருவ் கடும் கோபத்தில் இருக்கிறார். தனது அம்மாவை தவிக்க விட்டதற்காக அவரை பழி வாங்கவே போலீஸ் பணியில் சேர்ந்து அவரின் சாராய சாம்ராஜ்யத்தை அழிக்க வருகிறார் துருவ். சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் மிடுக்கென மிளிர்கிறார் துருவ்.

வசன உச்சரிப்பு, பாடி லேங்குவேஜ், ஆக்‌ஷன் என கொடுக்கும் இடத்திலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் துருவ். அதிலும், தந்தை மகன் இருவரும் சண்டை இடும் காட்சியில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் என ஆக்‌ஷனில் மிரள வைத்திருக்கின்றனர்.

விக்ரமின் நண்பனாக வரும் பாபி சிம்ஹா சரியான தேர்வு.. தனது சத்யவான் கேரக்டரை கனக்கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார். சிம்ரன், சனந்த் இருவரும் கதைக்கேற்ற கதாபாத்திரம் தான்.

ஞானம் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் தோன்றிய முத்துக்குமார் மிரள வைத்திருக்கிறார். பேட்ட படத்திற்குப் பிறகு வில்லத்தனத்தில் தனி முத்திரை பதிக்க ஆரம்பித்திருக்கிறார் முத்துக்குமார்.

பின்னனி இசை மிரட்டலாக கொடுத்தாலும், பாடல்களில் சற்று சரிவை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இன்னும் சற்று மெனக்கெடல் செய்து இசையை கொடுத்திருந்திருக்கலாம். மாஸான இசை கொடுக்க பல இடங்களை சந்தோஷ் நாராயணுக்காக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். பல வருடங்களை பல விதமான கலர்களை கொடுத்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தினேஷ் சுப்புராயனின் சண்டைக்காட்சி படத்திற்கு பெரும் பூஸ்டர். அதிலும் விக்ரம் சொலோ பைட், விக்ரம் – துருவ் விக்ரம் சண்டைக் காட்சி இந்த இரண்டும் ரசிகர்களுக்கும் பெரும் உத்வேகம்.

விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு இன்னும் சற்று கத்திரியை போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

விளக்கமாக கூறுகிறேன் என்று காட்சியை சற்று இழுத்து இழுத்து சொல்வதால் படத்தின் நீளம் சற்று அதிகமாகவே செல்கிறது. படத்தின் வேகத்திற்கு இந்த நீளம் பெரும் தடைக்கல்லாக நிற்கிறது. கதைத் தேர்வு, கதைக்களம், வசனம், நடிப்பு என அனைத்தும் படத்திற்கு பலமாக இருந்தாலும், நீளத்தினை சற்று குறைத்துக் கொண்டால் படம் இன்னும் சிறிது எனர்ஜியை கொடுத்திருக்கும்.

மகான் – மிரள வைத்த தந்தை (விக்ரம்) – மகன் (துருவ் விக்ரம்)

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close