Spotlightவிமர்சனங்கள்

FIR – விமர்சனம் 3.5/5

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் “எப் ஐ ஆர்”. இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.

கதைப்படி,

மெட்ராஸ் ஐஐடி’யில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞர் விஷ்ணு விஷால். முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். இப்படத்தில் மதம் ஒரு மிகப்பெரும் அங்கம் வகிப்பதால் இங்கு மதத்தைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது. பல இடங்களில் வேலை தேடியும், படித்ததற்கான பணி அவருக்கு கிடைக்கவில்லை. விஷ்ணு விஷாலின் தாயார் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருக்கிறார்.

ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் விஷ்ணு விஷால். அதே சமயத்தில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு இலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கிறது. அடுத்ததாக அதே அமைப்பு இந்தியாவிற்கும் மிரட்டல் விடுக்கிறது.

இச்சமயத்தில், கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த விஷ்ணு விஷால் அதன் நிறுவனத்திற்காக வாங்கிய கெமிக்கலை வெடிகுண்டு செய்வதற்காககத் தான் வாங்கினார் என்று மத்திய போலிஸார் அவரை கைது செய்கின்றனர்…

சாட்சிகளும் தடயங்களும் இவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்படுகிறார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் யார் ?? தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை..

ராட்சசன் படத்திற்கு பிறகு கேட்ட முதல் கதை என்று விஷ்ணு விஷால் கூறியிருந்தார்… ராட்சசன் கதையை தேர்ந்தெடுத்த அதே மனநிலையோடு எப் ஐ ஆர் கதையையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். சரியான கதைத் தேர்வை செய்து சில வருடத்திற்குப் பிறகு தனது பயணத்தை இனிதே ஆரம்பித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

கல்லூரி கால இளமை, வேலை தேடி அலையும் பொறுமை, வாழ்க்கையின் மீது வெறுமை, துணிந்து எழுந்த வலிமை, என பல கோணங்களில் பல விதமான நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

NIA உயர் அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன் இப்படத்திற்கு சரியான தேர்வு தான் என்றாலும், ஒரே அறையில் மீட்டிங்க் மீட்டிங்க் என்று நடத்தி முடிப்பது சற்று சோதனையான ஒன்றாகத் தான் இருக்கிறது.

NIA ஆபிசராக குணசேகர் கொள்ளியப்பன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய பிரவீன் குமார் மீது முதலில் தீவிரவாத தேடுதல் வேட்டை தொடர்கிறது. சிறிது நேரத்தில் அவர் இருக்கும் இடம் இல்லாமல் போக, க்ளைமாக்ஸில் வந்து மீண்டும் சேர்ந்து கொள்கிறார்.

விஷ்ணு விஷால் திரைப்பயண வரிசையில் இப்படம் ஒரு ஏணிப்படியாக அவருக்கு அமைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் தனது சிக்ஸ் பேக் உடல்கட்டினைக் கொண்டு எதிரிகளை பந்தாடுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வரும் ரைசாவிற்கு இப்படம் ஒரு மாறுதலான கதாபாத்திரம் தான். தனது கண் பார்வையிலேயே அசர வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். மஞ்சிமா மோகன் இப்படத்தின் ஓட்டத்திற்கு எவ்விதத்திலும் பயனளிக்காமல் சென்றது கவலை தான்.

விஷ்ணு விஷாலின் ஜோடியாக வரும் ரெபா மோனிகா, ஒரு பாடலுக்கு மட்டும் எட்டிப் பார்த்துச் செல்கிறார். அதன் பிறகு க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து மிரட்டுகிறார். கொடுத்த காட்சிகளில் பளிச் என மிளிர்கிறார் மோனிகா.

மற்றபடி, சில அல்ல பல படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதில் கதையின் வேகம், மேக்கிங்க் என பல இடங்களில் தனித்துவத்தை வெளிக்காட்டி தனது திறமையை வெளிக்காட்டியதற்காக இயக்குனர் மனு ஆனந்த் அவர்களை வெகுவாக பாராட்டலாம். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே தீவிரவாத அமைப்பு என்று எண்ணிக் கொண்டிருக்கும் பலருக்கும் இப்படம் ஒரு சவுக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தேசம் என்பது ஒன்றே அதை உயிர் கொடுத்து காக்கும் அனைவரும் இந்நாட்டின் மன்னனே என்று உரக்கக் கூறியுள்ளது FIR.

அருள் வின்செண்ட் இப்படத்தை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.

அஷ்வத் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசை மிரட்டல் தான். பின்னனி இசையில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்.

பிரசன்னாவின் படத்தொகுப்பு ஷார்ப் தான்.

FIR – ஆக்‌ஷன் FIRE

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close