Spotlightசினிமாவிமர்சனங்கள்

மகாராஜா – விமர்சனம் 3.5/5

குரங்கு பொம்மை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் நித்திலன் சாமிநாதனின் அடுத்த படமாக உருவாகியிருக்கிறது ”மகாராஜா”.

படத்தின் பர்ஸ்ட் லுக் ஆரம்பித்து டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. விஜய் சேதுபதி நடிக்கும் ஐம்பதாவது படம் இது என்பதாலும் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி எல் தேனப்பன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தினேஷ் புருஷோத்தமன். இசையமைத்திருக்கிறார் அஜனீஸ் லோக்நாத். படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார்.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஸ் பழனிச்சாமி படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

சென்னையில் சலூன் கடை நடத்தி வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். மகள் மீது தந்தையும், தந்தை மீது மகளும் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள்.

கேம்ப் ஒன்றிற்காக மகள் வெளியூர் சென்ற நிலையில், வீட்டிலிருந்த லக்‌ஷ்மியை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க செல்கிறார் விஜய் சேதுபதி.

லக்‌ஷ்மி என்றால் யார் என்று தொடர்ந்து போலீஸார் கேள்வி கேட்க, சொன்னதை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து லக்‌ஷமி என்றால் என்ன என்பதை போலீஸார் கண்டுபிடித்து விட, விஜய் சேதுபதி மீது கோபம் கொள்கின்றனர் போலீஸார்.

அதனைத் தொடர்ந்து அந்த லக்‌ஷ்மியை கண்டுபிடித்துக் கொடுத்தால் தான் 7 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக போலீஸாரிடம் கூறிவிடுகிறார் விஜய் சேதுபதி. இப்படி பணம் கொடுத்து கண்டுபிடிக்க சொல்லுமளவிற்கு அந்த லக்‌ஷ்மியில் என்ன தான் இருக்கிறது.

அதற்காக மட்டும் வரவில்லை வேறு ஏதோ காரணமும் அதில் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நட்டி.

லக்‌ஷ்மி என்ன.? விஜய் சேதுபதியின் நோக்கம் என்ன.? விஜய் சேதுபதியின் திட்டம் தான் என்ன.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஜய் சேதுபதி மகாராஜா கதாபாத்திரல் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி இனி ஹீரோவாக நடிப்பதெற்கெல்லாம் செட் ஆக மாட்டார் என்று சொன்னவர்களின் வார்த்தையை பொய்யாக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.

காமெடி, எமோஷன்ஸ், ஆக்‌ஷன் என பல கோணங்களில் தனது நடிப்பில் யதார்த்தை கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது மகள் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடத்திலும் கைதட்டல் கொடுக்குமளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இவருக்கு இணையான நடிப்பைக் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார் அனுராக் காஷ்யப். தான் ஒரு இயக்குனர் மட்டுமல்ல, நல்ல நடிகனும் கூட என்று ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப்.

தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சிங்கம்புலிக்கு இப்படம் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த மனிதனிடம் இருந்து இப்படியொரு நடிப்பா என வியக்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்து அசத்திவிட்டார் சிங்கம்புலி.

தொடர்ச்சியாக நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான பங்களிப்பை அளவாக கொடுத்து தங்களின் கதாபாத்திரத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு இரு பெரும் தூண்களாக வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், படத்தொகுப்பு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது.

நடிகர்களின் 50வது படமாக இருக்கட்டும் 100வது படமாக இருக்கட்டும் என அவர்களின் நட்சத்திர படங்களுக்கு அதிகப்படியான உழைப்பைக் கொடுப்பார்கள். அதேபோல், இப்படத்தில் விஜய்சேதுபதி கொடுத்த உழைப்பு வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கில்லி போன்று சொல்லி அடித்து வெற்றி கண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

மகாராஜா – வின்னர் ராஜா…

Facebook Comments

Related Articles

Back to top button