தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் ‘மணியார் குடும்பம்’.
கிராமத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம் இந்த மணியார் குடும்பம். இந்த குடும்பத்தின் வாரிசுகளில் வந்தவர் தம்பி ராமையா. இருக்கும் சொத்தையெல்லாம் விற்று திண்பதிலும், கேட்டவருக்கெல்லாம் அள்ளி கொடுத்தும் ஒரு பொறுப்பில்லாமல் இருக்கிறார் தம்பி ராமையா. அவரது மகனையும் அப்படியே வளர்க்கிறார்.
இந்த நிலையில்தான், தன் மகனுக்கு பெண் கேட்பதற்காக தனது தங்கையின் வீட்டிற்கு செல்கிறார் தம்பி ராமையா. அங்கு அவரது மச்சான் ஜெய் பிரகாஷ் தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறி அவமானப்படுத்தி விடுகிறார்.
சொந்தமாக காற்றாலை ஒன்றை வைத்து தொழில் துவங்கி, தனது மாமன் மகளை திருமணம் செய்யலாம் என திட்டமிடுகிறார் நாயகன் உமாபதி. தொழில் தொடங்க ஊர் மக்கள் பங்காக ஒரு கோடி ரூபாயை வசூலித்து, அதை வங்கியில் செலுத்த கிளம்புகிறார்கள் அப்பாவும் மகனும்.
கால்டாக்சி டிரைவராக வரும் மொட்ட ராஜேந்திரன் இவர்கள் இருவரையும் சாமர்த்தியமாக ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகிறார். இதை நம்பாத ஊர்மக்கள், பணத்திற்கு கெடு வைத்து, தம்பிராமையா குடும்பத்தை வீட்டுச்சிறையில் வைக்கின்றனர். பணத்தை இவர்களிடம் இருந்து அபேஸ் செய்தது யார்..? அந்த பணத்தை மீட்டாரா..? இல்லையா…? என்பது மீதிக்கதை.
நல்ல உடலமைப்பு, நடனம், காதல், ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் உமாபதி. கதாபாத்திரமாகவே தனது கேரக்டரை செதுக்கியுள்ளார் உமாபதி.
நாயகியாக வரும் மிருதுளா முரளி – அழகு, அசத்தல்.
வழக்கம்போல் தம்பிராமையா ஒரு அசாத்தியமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு நம்மை ஏங்க வைத்துவிட்டு போகிறார்.
தம்பி ராமையாவின் இசையில் குத்தாட்டம் பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு – கலர்புல்
கதையம்சத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமே தம்பி ராமையா சார்.
மணியார் குடும்பம் – ஒருமுறை ரசிக்கலாம்..