Spotlightசினிமா

செப்டம்பர் 19ல் திரைக்கு வரும் “மாயன்”

திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் “மாயன்” திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக “மாயன்” இருக்கிறது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக டிஜிட்டல் புரொடக்ஷன் செய்யப்பட்டது. 2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒன்று, மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டு, உலகம் அழிந்ததா இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.

ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் “மாயன்” படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டாட்டோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button