Spotlightவிமர்சனங்கள்

அண்ணாத்த – விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ”அண்ணாத்த”. தீபாவளி தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ளனர்…

கதைப்படி,

கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராகவும், ஊரில் செல்வாக்கு மிக்கவராகவும் இருக்கிறார் காளையன் (ரஜினிகாந்த்). அம்மாவின் மறைவிற்கு பிறகு தனது தங்கையே (கீர்த்தி சுரேஷ்) உலகமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி.

கீர்த்தி சுரேஷுக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருந்து வருகிறார் ரஜினி. தங்கை கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடி அலைகிறார். பிரகாஷ் ராஜ்ஜின் தம்பியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார் ரஜினி.

திருமணத்திற்கு ஊரே திருவிழா கோலம் கொள்கிறது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், இரவோடு இரவாக கீர்த்தி சுரேஷ் தனது காதலனோடு கொல்கத்தாவிற்கு ஓட்டம் பிடித்து விடுகிறார்.

அவமானம் கொண்டு உடைந்து போகிறார் ரஜினி. ஆறு மாதத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷை காண கொல்கத்தா செல்கிறார் ரஜினி.

அப்போது தான் ரஜினிக்கு தெரிகிறது தனது தங்கை மிகப்பெரும் பிரச்சனையில் இருப்பதாக…

அது என்ன பிரச்சனை.? பிரச்சனையில் இருந்து தனது உயிரான தங்கையை ரஜினி காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை…

ரஜினிகாந்த், வழக்கம்போல் சூப்பர் ஸ்டாராக தனி ஒருவனாக மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி, கலகலப்பு, ஸ்டைல் என கலர்புல்லான தோற்றத்தில் அசர வைத்திருக்கிறார் ரஜினி.

தன் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டிய ஸ்டைல், மாஸ் என இரண்டையும் தீபாவளி விருந்தாக ”அண்ணாத்த” படம் மூலம் படைத்திருக்கிறார் ரஜினி.

படபடவென பட்டாசு வெடித்தாற்போல படம் முழுவதும் வேகத்தை ஏற்றியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். ரசிகர்களை எந்த இடத்திலும் சோர்வடைய வைக்காமல் தன் கண் பார்வையில் வேகம் எடுக்க வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

சூப்பர் ஸ்டாருடன் காதல் காட்சிகளில் மட்டும் எட்டி பார்த்துவிட்டு சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா, படத்தின் அநேக காட்சிக்க்கு தோன்றி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். அழும் காட்சிகளிலும் அழகாகவே இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

கண்ணீர் மட்டுமே தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் என்று படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அழுதே படத்தை கொண்டு செல்கிறார் கீர்த்தி சுரேஷ். முதல் பாதியில் அவ்வளவு மகிழ்ச்சியாக வந்த கீர்த்தி, இரண்டாம் பாதியில் கண்ணீரை தாரைதாரையாக கொட்டிவிடுகிறார். திரையரங்கிற்கும் உள்ளேயும் கண்ணீர் மழை தான். கீர்த்தியின் நடிப்பில் குறை சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. கீர்த்தி – நேர்த்தி.

வில்லனாக வந்த அபிமன்யு சிங் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் வில்லத்தனத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

வழக்கம்போல் சூரியின் காமெடி கொஞ்சம் கடுப்படையத் தான் வைத்திருக்கிறது. குஷ்பூ மற்றும் மீனா இருவருக்கும் படத்தில் எட்டி பார்த்து செல்லும் கதாபாத்திரம் தான். பெரிதாக காட்சிகள் வைக்கப்படவில்லை.பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன், வேலா ராமமூர்த்தி, சதீஷ், சத்யன், கபாலி விஸ்வநாத் என பலரும் படத்தில் ஒரு சில காட்சிகளில் எட்டி பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

சிறுத்தை படத்தின் வில்லத்தனத்தில் கொஞ்சம்,
வேதாளம் படத்தின் தங்கச்சி செண்டிமெண்ட் கொஞ்சம்,
விஸ்வாசம் படத்தில் க்ளைமாக்ஸ் பீலிங்க்ஸ் காட்சிகள் கொஞ்சம்,
என அவரது படத்தை அவரே மீண்டும் ஒரு சமைத்து “அண்ணாத்த” என்ற புது டிஷ்ஷை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.

சிவா இயக்கிய படங்கள் அனைத்தின் கலவையாகதான் “அண்ணாத்த” தோன்றியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கிய படங்கள் எதுவும் இதுவரை பார்க்காதவர்கள், இப்படத்தை மட்டும் பார்த்தால் போதுமானது….

தமிழ் சினிமாவின் உயர் நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்கும் படம் என்றால் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படியாக இருக்கும், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் கதையைத் தானே இயக்குனர் கொடுத்திருக்கவேண்டும், ஏற்கனவே அரைத்து பொங்கிய மாவை மீண்டும் பொங்க வைத்து ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறார் இயக்குனர் சிவா… ரூட் கொஞ்சம் மாத்துங்க சிவா சார்..

இசையில் எந்த குறையும் இல்லை.. பாடலில் ஆரம்பித்து பின்னனி இசை ஒவ்வொன்றையும் செதுக்கி செதுக்கி கொடுத்திருக்கிறார் டி இமான். சார சார காத்தே பாடலில் காதல் கண் குளிர்கிறது, வா சாமி பாடலில் கண் விரிந்து ஆக்ரோஷம் கொள்கிறது.

கலர்புல்லான காட்சிகளை கொடுத்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. சார சார காத்தே பாடலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் மனதை வருட வைத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். மாஸான காட்சிகளை ஆங்காங்கே சிதற விட்டிருக்கிறார் வெற்றி. அதிலும் பைக் சீன்… செம ..

கொடுத்த கதையை அனைவரும் சிறப்பாக செய்தாலும், கொடுக்கப்பட்ட கதை நமக்கான சோதனையாக தெரிகிறது.

அண்ணாத்த – என்னத்த சொல்ல அப்டின்னு இல்லாம, சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு ஒரு விசி(ல்)ட் அடிச்சிடலாம்..

Rating  – 3.25/5

Facebook Comments

Related Articles

Back to top button