
காதல் திருமணம் செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆரம்பித்த ஜோடி தான் பரத் & அன் ஷுத்தல். காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வரும் பரத், வேலைப் பளுவால் வீட்டில் இருக்கும் தனது மனைவி மீது சரிவர அக்கறை, காதல், இல்லாதவராக மாறுகிறார். இதனால் மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்கிறார் பரத்.
இந்நிலையில், பரத் ஏரியாவில் ஒரு பெண் மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் பரத். அசிஸ்டண்ட் கமிஷ்னராக வரும் சுரேஷ் சந்திர மேனன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பரத் வழிநடத்த இந்த வழக்கின் விசாரணை துவங்குகிறது.
விசாரணை துவங்க ஆரம்பித்ததும், அடுத்தடுத்து மூன்று பெண்கள் இதே போல் மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொல்லப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்தது யார்..?? பரத் – அன் ஷுத்தல் குடும்ப உறவுக்கும் இந்த கொலைகளுக்கும் சம்மந்தம் உள்ளதா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.
பல படங்களுக்குப் பிறகு ‘அப்பாடா பரத் மீண்டும் வந்து விட்டார்’ என்ற பெருமூச்சு விடவைக்கிறது இந்த ‘காளிதாஸ்’ கதாபாத்திரம். மிகவும் நேர்த்தியான, கச்சிதமான அளவெடுத்து நடித்தது போல் நடித்திருக்கிறார் இல்லை இல்லை வாழ்ந்திருக்கிறார் பரத்.
மனைவியை நெருங்கவும் முடியாமல், பணியை உதாசினப்படுத்தவும் முடியாமல் தவிக்கும் தவிப்பில் பரத், தனது நடிப்பில் சல்யூட் வாங்குகிறார்.
பரத் சார் – வாழ்த்துகள்.
அடுத்ததாக நாயகி அன் ஷுத்தல். தமிழுக்கு இப்படத்தின் மூலம் தான் அறிமுகம் என்றாலும், நடிப்பில் பாராட்டைப் பெறுகிறார். காதல் புரியும் தருணமாக இருக்கட்டும், கோபம் கொண்டு எரிந்து விழும் காட்சியாக இருக்கட்டும், நெருக்கமாக இருக்கும் காட்சியாக இருக்கட்டும் என அனைத்திலும் கை தட்டல் வாங்குகிறார். அதிலும் க்ளைமாக்ஸ் செம..
நடிகர் சுரேஷ் மேனன், இதில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெறுகிறார்.
படத்தில் போலீஸ் ஏட்டாக வருபவர், விஜய் டிவி தங்கதுரை என இருவரும் ஆங்காங்கே அடிக்கும் சின்ன சின்ன ஜோக்குகள் கலகலப்பூட்டுகின்றன.
விஷால் சந்திரசேகரின் இசையில் பின்னனி இசை படத்தின் கதையோடு பயணம் போட கைகொடுத்திருக்கிறது. அங்கங்கு வரும் பாரதியாரின் பாடல்கள் இனிமை.
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் தான்.
யார் அந்த கொலையாளி என்று காட்சிக்கு காட்சிகள் திக் திக் காட்ட வைத்து, இவர் தான் அந்த கொலயாளி என்று செல்லும் போது, அவர் இல்லை இவர் என பலரையும் குழப்ப வைத்து, க்ளைமாக்சில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் அப்லாஷ் தான். இயக்குன ஸ்ரீ செந்தில்-க்கு வாழ்த்துகள்.
படத்தை திரையரங்கில் பார்த்து அதன் ட்விஸ்ட் காட்சிகளையும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் வரும் த்ரில்லிங்கை கண்டு ரசியுங்கள்… ‘வொர்த்’



