Spotlightசினிமாவிமர்சனங்கள்

நாயாட்டி – விமர்சனம் 2.25/5

தர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி, இவர்களின் நடிப்பில் நாயகனான ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நாயாட்டி.

கதைப்படி,

முன்னொரு காலத்தில் அடிமை வம்சமாக இருந்த ஒரு சமூகத்தினர், வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு பயப்பட வேண்டும் என்பதற்காக சில சூனியம் வைப்பதை கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படியாக, கிராமத்தில் இருப்பவர்களை பயமுறுத்தவும் மிருகங்களை வேட்டையாடவும் ஆக்ரோஷமான தோற்றத்தோடு திரிந்து வந்தனர். காலப்போக்கில் இவர்களே சூனியக்காரி என்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு சூனியம் வைப்பதுவே தொழிலாக இருந்து வந்தது. இவர்களைத் தான் நாயாட்டி என்று அழைத்திருக்கிறார்கள்.

சுமார் 800 வருடத்திற்கு பிறகு இக்கால வாழ்வியல் சூழலுக்கு வருகிறது திரைப்படம்… நாயகனான ஆதர்ஷ், நாயகி காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி உள்ளிட்ட ஐவரும் ரிசர்ச் செய்யும் குழுவினர்.

ஒரு அடர்ந்த காட்டிற்கு பழைய பங்களா ஒன்று இருக்கிறது. அதை வீடியோ எடுத்துத் தருமாறு இந்த ஐவரை நாடுகிறார் ஒருவர்.

அதற்காக இந்த ஐவரும் அந்த காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு, முழு நீள கருப்பு உடையில் ஒரு உருவம் அவர்களை பின் தொடர்கிறது.

தொடர்ந்து அந்த அமானுஷ்ய உருவம், ஒவ்வொருவரையும் கொலை செய்கிறது. அந்த அமானுஷ்யத்திடம் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்.? இந்த காட்டிற்குள் இவர்களை திட்டம்போட்டு அழைத்து வந்ததன் நோக்கம் என்ன.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறார்கள் படத்தில் நடித்தவர்கள். படத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்ட கதையானது ஒரு சுவாரஸ்யத்தோடு ஆரம்பித்தது. அடடா, படத்தின் கதை வேற லெவலில் இருக்கும் என்ற ஆவலைத் தூண்டியதோடு சரி, அதன்பிறகு எந்த காட்சியும் நம்மை கவராமல் போனது பெரிய ஏமாற்றம் தான்.

படத்தின் இறுதி காட்சியில், வீட்டிற்குள் வரும் இருவருக்கும் மயக்க மருந்து கலந்து கொடுப்பவர்கள், படத்தின் ஆரம்பத்திலேயே அனைவருக்கும் கொடுத்திருந்திருக்கலாமே.?

இந்த உடம்பில் இருந்து அந்த உடம்பிற்கு செல்லும் கூடு விட்டு கூடு பாயும் முறை என கடைசி 10 நிமிடங்களைத் தவிர, முழுக்க முழுக்க காடு, ஓட்டம், கொலை என இதை மட்டுமே கதை நகர்ந்து சென்றது எரிச்சலடைய வைத்துவிட்டது.

முதல் பத்து நிமிடங்கள் நாயாட்டியின் வரலாறையே படமாக எடுத்திருந்தால் கூட ரசிக்கும்படியாக இருந்திருக்குமே என்ற எண்ணம் தான் படம் பார்த்த அனைவருக்கும் தோன்றியது. யாரும் கூறாத, தொடாத கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கலாமே.?

படத்தின் மிகப்பெரிய மைனஸ் பின்னணி இசை தான்… ஆரம்பத்தில் கதை கூறும்போது பின்னணி இசை ஓவராக வந்து ஆங்காங்கே சொல்வதைக் கூட கேட்க முடியாத அளவிற்கு காதுகள் கிழிய வைத்து விட்டார் இசையமைப்பாளர்…

திரைக்கதையில் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாம் இயக்குனர் ஆதேஷ் அவர்களே..,

நாயாட்டி – ஹாரர் விரும்பிகள் ஒருமுறை விசிட் அடிக்கலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button