Spotlightசினிமா

”சினிமாத் துறைக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” – நமக்கு நாம் பட விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு!

சுந்தரமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள நமக்கு நாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் மா பா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் இயக்குனர் சுந்தரமூர்த்தி பேசும்போது

அரசியலில் இருப்பவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த வேலை வரும் என்று தெரியாது. அந்த சூழ்நிலையில் 15 நாட்களுக்கு முன்பே இப்படத்தைப் பார்த்து ரசித்து பல நல்லக் கருத்துக்களை இப்படம் கொண்டுள்ளது. ஆகையால் என்னால் ஆன உதவிகளையும், அரசு சார்பான உதவிகளையும் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதேபோல கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் என்னுடைய நண்பர். இப்படம் வெளிவருவதற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் உதவியுள்ளார். ஒரு காலத்தில் படம் எடுப்பது சிரமம், வெளியிடுவது எளிது. ஆனால் படம் எடுப்பது எளிது, வெளியிடுவது மிகவும் சிரமம்.

ஆனால் இந்தக் கதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் எடுத்துள்ளேன். 1974ம் ஆண்டு MGR ‘புரட்சி வேந்தன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி வைத்தார். அதில் நான் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது ஐசரி வேலன் என் நாடகத்தில் பங்கேற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 25 நாடகங்கள் நடித்துள்ள அனுபவம் எனக்கிருக்கிறது.

இதுவரை எந்தவொரு இயக்குனரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. பத்திரிகையாளராக இருந்தபோதும் இவர்தான் என் குரு என்று சொல்லும் நிலை இல்லை. அதேபோல் சினிமாத்துறையிலும் பணியாற்றினேன் என்று சொல்லும் நிலை இல்லை. இந்தப் படத்தை நான் எடுக்கும்போது எவ்வளவு சிரமப் பட்டேன் என்பது இப்படக்குழுவினர்களுக்கு நன்றாகத் தெரியும். மேடையில் இருக்கும் அத்துனைப் பேரும் உதவிப் புரிந்திருக்கிறார்கள். இப்படத்தை நான் துவங்கும்போது பல தொழில்நுட்ப கலைஞர்கள் மிரட்டினார்கள். சங்கம் இருக்கிறது என்று இடையூறு செய்தார்கள். அந்த சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது ஜாகுவார் தங்கம் தான். இவ்வாறு இயக்குநர் சுந்தரமூர்த்தி கூறினார்.

இயக்குனர் S.P. முத்துராமன் பேசும்போது

புரட்சி வேந்தன் ஆசிரியராக இருந்த சுந்தரமூர்த்தியை நீண்ட காலமாக காணவில்லையே என்று தேடியபோது, ஆதரவற்ற மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் வைத்து நடத்துகிறார் என்ற செய்தியைக் கேட்டபோது மகிழ்ச்சியடைந்தேன். எனது இல்லத்தில் இருப்பவர்களை வைத்து ஒரு கதை எழுதி இயக்கி, அவர்களையே நடிக்கவும் வைத்திருக்கிறேன் வந்து பாருங்கள் என்றபோது, இவருக்கு என்ன தைரியம் என்று வியந்தேன். எனக்கு அந்த தைரியம் இல்லை. வியாபார நோக்கோடு மட்டுமே படம் எடுப்பவன் நான். இந்த மனிதர் நல்லக் கருத்துக்களை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்ற நோக்கோடு படம் எடுத்திருக்கிறார் பாராட்டுக்கள். மேலும், உலகத்தில் இரண்டு மக்கள் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை என்றார்.

மூத்த பத்திரிக்கையாளர் ராம்ஜி பேசும்போது

இப்படம் சொல்ல வரும் கருத்து இரண்டு தான். அனாதைகளை உருவாக்க வேண்டாம். முதியவர்களை இல்லத்தில் தள்ள வேண்டாம். விழிப்புணர்வு மற்றும் சமூக சிந்தனையுள்ள படத்தை எடுத்திருக்கிறார் சுந்தரமூர்த்தி. வாழ்த்துக்கள் என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது

ஆதரவற்றவர்களுக்கு ஒரு இல்லம் நடத்தி, யதார்த்தத்தைப் படமாக்கி அதன்மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற நல்லப் பணியை செய்த புரட்சி வேந்தன் சுந்தரமூர்த்தியைப் பாராட்டுகிறேன். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சூழ்நிலைக் காரணமாக ஆதரவற்று இருப்பவர்களுக்கு இல்லம் வைத்து நடத்துகிறார். மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த இல்லத்திற்கு பல உதவிகளை செய்தார் என்று கூறினார்கள். அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். பல நல்ல கருத்துக்களை நாடகங்கள், சினிமா மூலமாகத்தான் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆகையால் சினிமாத் துறைக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button