
கார்த்திக் அத்வெய்த் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வானி போஜன் மற்றும் தனஞ்செயா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பாயும் ஒளி நீ எனக்கு”.
கதைப்படி,
நாயகனான விக்ரம் பிரபுவிற்கு கண்ணில் பார்வை குறைபாடு இருக்கிறது. அதிகமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே, சிறிதளவிற்காவது பார்வை தெரியும். சிறிய இருட்டு என்றால் கூட சுத்தமாக பார்வை தெரியாது.
இந்த குறை இருப்பதால், எதிரில் இருப்பவர்களைகூட சரியாக பார்க்க முடியாது.
இந்த சூழலில், தனது கண்முன்னே தனது அப்பாவை ஒரு டீம் கொன்று விடுகிறது. கண் குறைபாடு காரணமாக யார் அவரை கொன்றது என்று தெரியாமல் போய்விடுகிறது விக்ரம் பிரபுவிற்கு.
அதன்பிறகு தனது தந்தை இறந்ததற்கு பின்னால் என்ன நடந்தது.? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்.? என்பதை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனான விக்ரம் பிரபு, கதைக்கேற்ற ஹீரோவாக ஜொலித்திருக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களில் இருந்த தோற்றம் போல் இல்லாமல், சுமார்ட்டான லுக்’கில் கலக்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படத்திற்கு மிகப்பெரும் பலமே ஆக்ஷன் தான். விக்ரம் பிரபுவின் வேகம், ஆக்ஷன் காட்சிகளுக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.
வில்லனாக நடித்திருந்த தனஞ்செயா கனக்கச்சிதமான தேர்வு, அவரின் அறிமுக காட்சியில் நடக்கும் சண்டைக் காட்சியில் மிடுக்கென காட்சியை மிளிர வைத்திருக்கிறார்.
விக்ரம் பிரபுவிற்கு கண் குறைபாடு இருப்பதால், அவரின் பார்வையில் இருந்து ஒளிப்பதிவை கொண்டு வருவது சிரமம். அதை அழகாக செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
கார்த்தி நடித்திருந்த பையா படத்தின் கதை ஆங்காங்கே சற்று ஒத்துப் போனாலும் கூட, அதை வேறு விதமாக வேறு பாணியில் சொல்லியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிரள வைத்தது.
சாகரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிக்கு வேகம் கொடுத்து ஈடு கொடுத்திருக்கிறது.,
முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்றது ப்ளஸ். காதல் காட்சிகள் ஆங்காங்கே சற்று வேகத்தடையாக இருந்தாலும், கதைக்கு பெரிதளவில் பாதிப்பை கொடுக்கவில்லை.
இதுவரை வெளிவந்த விக்ரம்பிரபுவின் படங்களிலே, இது ஒரு அக்மார்க் பதிக்கும் தனி முத்திரைதான்…
ஆக,
பாயும் ஒளி நீ எனக்கு – ஆக்ஷன் பாய்ச்சல்