
கிருமி, சுழல் படங்களின் இயக்குனர் அனுசரண் இயக்கத்தில் கருணாகரன், யோகிபாபு, சிங்கமுத்து, ராமர், தங்கதுரை, லியோனி மற்றும் லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பன்னிகுட்டி”. இப்படத்தில் பன்னிகுட்டி ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
கதைப்படி,
நாயகன் கருணாகரன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கட்டிக் கொடுத்த தங்கை கணவரோடு சண்டைப் போட்டுக் கொண்டு வீட்டில் வந்து உட்கார்ந்திருப்பதால் அந்த கவலை ஒரு பக்கம்,
இதை நினைத்து கவலையில் தினமும் சரக்கு அடித்துக் கொள்ளும் அப்பா டி பி கஜேந்திரனை நினைத்து கவலை ஒரு பக்கம்,
தனது காதல் இன்னும் ஒருதலைக் காதலாகவே இருக்கிறது என்ற கவலை ஒரு பக்கம், என கவலைகள் பல சேர்ந்ததால் தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்கில் தொங்க செல்கிறார் கருணாகரன்.
தூக்கில் தொங்கிய கருணாகரனை காப்பாற்றுகின்றனர் தங்கதுரையும் ராமரும்.
அதன்பிறகு தன் கவலைகளை அவர்களிடம் கூறுகிறார் கருணாகரன். இந்த சோதனைகளை கடக்க மலை உச்சியில் இருக்கும் லியோனி சாமியாரிடம் கருணாகரனை அழைத்துச் செல்கிறார் ராமர்.
அவர் ஒரு பரிகாரம் செய்யச் சொல்ல, அது அடுத்த கட்ட சோதனைக்கு சென்றுவிடுகிறது. பைக்கில் செல்லும் போது பன்னிக்குட்டி ஒன்றின் மீது பைக் மோதிவிடுகிறது. செய்வதறியாது திகைத்து நின்ற கருணாகரனிடம்.,
மீண்டும் அதே பன்னிகுட்டி மீது பைக்கில் சென்று மோதினால் மட்டுமே இனி உன் வாழ்க்கையில் நல்லது என்பதே நடக்கும் என்று கூறிவிடுகிறார் லியோனி.
அந்த பன்னிக்குட்டியை தேடி அலைகிறார்கள் கருணாகரன், ராமர், தங்கதுரை உடன் சிங்கபுலியையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
இவர்களின் நால்வரின் கையில் பன்னிக்குட்டி சிக்கியதா.? பன்னிக்குட்டியால் தனது வாழ்க்கையே அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கும் யோகிபாபுவின் கையில் பன்னிகுட்டி சிக்கியதா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் கருணாகரன், படத்தின் கதைக்கு சரியான தேர்வு தான். யோகிபாபு, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், டிபி கஜேந்திரன், என படம் முழுக்க காமெடி நடிகர்கள் குவிந்திருந்த போதும் காமெடிக்கு பெரிதான பஞ்சம் நிலவியிருக்கிறது.
முழுக்க முழுக்க காமெடி படம் தான் என்று எடுக்கப்பட்ட இப்படத்தில் காமெடி எங்கப்பா இருக்கு என தேட வைத்துவிட்டார் இயக்குனர்.
ஒரு நல்ல கதையை கிராம பின்னணியில் எடுக்க முயற்சித்த இயக்குனர், அதில் பெரிதாக சறுக்கியிருக்கிறார்.
கருணாகரின் திருட்டு முழி, அசடு முழி, என ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி காட்சிகளும் பெரிதாக ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. நாயகி அழகு தேவதையாக வருகிறார்.
சுழல் போன்ற படத்தினை இயக்கிவிட்டு, இப்படியொரு படத்தை இயக்குனரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரைக்கதையில் பெரிதான ஒரு மெனக்கெடலை கொடுத்திருக்கலாம்.
கே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்கும் ரகமாகவே இருந்தது.
சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு சூப்பர். கிராம பின்னணியை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பன்னிகுட்டி – பலவீனம்.





