
கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், காளி வெங்கட், சின்னி ஜெயந்த், ரேணுகா நடிப்பில் உருவாகி ஜீ5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் தான் “பேப்பர் ராக்கெட்”. எப்போதுமே தனது இயக்கத்திலும், கதையிலும் வித்தியாசத்தை காட்டும் கிருத்திகா, இப்படத்திலும் என்ன மாதிரியான வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.
கதைப்படி,
கன்னியாகுமரியில் நல்ல பெயரோடு வாழ்ந்து வருபவர் நாகிநீடு. மனைவி இல்லாததல் தனது ஒரே மகனான காளிதாஸ் ஜெயராமை மிகவும் பாசத்தோடு வளர்த்து வருகிறார். காளிதாஸ், சென்னையில் பெரிய கம்பெனியில் உயர் பதவியில் பணிபுரிந்து வருகிறார். வேலைப் பளு காரணமாக தந்தையை ஊரில் சென்று நேரில் கூட காண முடியாமலும், போனிலும் பேச முடியாமலும் சென்னையிலேயே இருக்கிறார் காளிதாஸ்.
ஒருநாள் அதிகாலை, தந்தை இறந்து விட்டதாக காளிதாஸ்க்கு போன் வருகிறது. அதிர்ச்சி அடைந்த காளிதாஸ், இறந்த தந்தையை காண ஊருக்குச் செல்கிறார். பணி, பணம் என்று சென்றதால் தனது தந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை என்றெண்ணி தினம் தினம் மனம் உடைகிறார்.
தனது வேலையிலும் சரிவர கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார் காளிதாஸ். மருத்துவரான பூர்ணிமா பாக்யராஜிடம் கவுன்சிலிங்க் செல்கிறார்.
அங்கு, வாழ்க்கை வாழப்பிடிக்காதவர்கள் சிலரும் அங்கு கவுன்சிலிங்க் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து காளிதாஸும் கவுன்சிலிங்க் எடுத்துக் கொள்கிறார் காளிதாஸ்.
தான்யா ரவிச்சந்திரன், கருணாகரன், ரேணுகா, கெளரி கிஷன், நிர்மல் இவர்களோடு காளிதாஸுக்கும் கவுன்சிலிங் கொடுக்கிறார் பூர்ணிமா.
எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதால், சுற்றுலா ஒன்று சென்றால் மன நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி காளிதாஸோடு இணைந்து அனைவரும் ஒரு வாகனத்தில் தொலை தூர பயணம் (Long Trip) செல்ல திட்டம் இடுகின்றனர்.
இந்த தொலைதூர பயணத்தை திட்டமிட்டு அனைவரையும் ஊர் ஊராக அழைத்ததுச் செல்கிறார் காளிதாஸ்.
அந்த தொலைதூர பயணம் அனைவரது வாழ்வையும் எந்த அளவிற்கு மாற்றியது என்பதே “பேப்பர் ராக்கெட்” படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் சரியான தேர்வு தான். ஏழு எபிசோடுகள் கொண்ட தொடரில் முதலில் நமது சோதனையை சற்று சீண்டினாலும், போக போக நம்மை கதைக்குள் இழுத்துச் செல்ல வைத்தது இயக்குனரின் திறமை தான்.
Long Trip’ல் நம்மையும் ஒருவராக அழைத்துச் சென்று அவர்களோடு பயணம் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா. ஒவ்வொரு கேரக்டருக்கும் அமைக்கப்பட்ட பின்னணி கதை, படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். அதிலும், கருணாகரனின் கதை நகர்வு அழகான வாழ்வியல் தான்.
உன்னி கதாபாத்திரத்தில் நடித்த நிர்மல், இன்னமும் நம்மோடு வாழ்ந்து வரும் ஜீவனாக நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார். உன்னியின் காதலியாக வந்திருந்த செல்வி கதாபாத்திரம், அவ்வளவு அழகு. தேவதையாக காட்சியளித்து நம் கண்கள் ஸ்கீரினை விட்டு விலகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்குடி, என படம் பார்ப்பவர்களையும் அந்தந்த ஊருக்குள் அழைத்துச் சென்று பயணப்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆரம்பத்தில் கதை கன்னியாகுமரியில் நடக்கிறதா சென்னையில் நடக்கிறதா என்ற குழப்பத்தை படக்குழு கவனித்து சரி செய்திருக்கலாம்.
இப்படியான ஒரு அன்பான படத்திற்கு பின்னணி இசையை இன்னும் சற்று கூடுதல் கவனம் கொண்டு கொடுத்திருந்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட்டது.
ஆறு எபிசோடுகளோடு படத்தை முடித்திருந்தால் இன்னும் ஷார்ப்பாக பேப்பர் ராக்கட்டை ரசித்திருந்திருக்கலாம் என்ற உணர்வு வந்து போகாமல் இல்லை.
எனினும் அன்பு ஒன்று தான் கடைசி வரை நம்முடன் வாழும் சொத்து என்பதை வாழ்வியல் கொண்டு நம்மை பயணப்பட வைத்த படக்குழுவிற்கு பெரிய நன்றியைக் கூறிக் கொண்டு,
பேப்பர் ராக்கெட் – வாழ்வியலின் ரசனை