Spotlightவிமர்சனங்கள்

நெடுநல்வாடை விமர்சனம் 4/5

தாத்தாவிற்கும் பேரனுக்கும் நடக்கும் ஒரு பாசப்பிணைப்பின் போராட்டமே இந்த ‘நெடுநல்வாடை’

திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் செல்லையா (பூ ராம்). வீட்டை விட்டு ஓடிப் போன மகள் இரண்டு குழந்தைகளோடு மீண்டும் தனது அப்பாவை(பூ ராமை) நாடி வருகிறார்.

மகனின் எதிர்ப்பையும் மீறி தனது மகளையும் பேரப்பிள்ளைகள் இருவரையும் வீட்டிற்குள் தங்க வைக்கிறார் பூ ராம். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் தாய் மாமன் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லி தனது பேரனை வளர்க்கிறார்.

படிப்பில், படு சுட்டியாக இருக்கும் நாயகன் இளங்கோவிற்கு நாயகி அஞ்சலி நாயர் மீது காதல். தாத்தா அறிவுரையின்படி தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்கிறார் இளங்கோ.

ஒரு கட்டத்தில், காதலால் பல பிரச்சனைகள் ஏற்பட, இறுதியில் இளங்கோ வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார்.

இளங்கோவின் காதல் ஜெயித்ததா..?? தனது இறுதி காலத்தில் பேரனை பூ ராம் கண்டாரா இல்லையா..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனாக இளங்கோ அமைதியான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். எதற்காக இந்த கதாபாத்திரம் அமைதியாக இருக்கிறது என்று பார்த்தால், அந்த அமைதிக்கும் ஒரு அர்த்தத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். ‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் மனதளவில் நான் சிரித்ததே இல்லை. என்னை மனதளவிலும் சிரிக்க வைத்தவள் அவள் தான்’ என்று பேரன் இளங்கோ மூலமாக தாத்தா பூ ராமிடம்,கதாபாத்திரத்திற்கான விளக்கத்தை கொடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகியாக வரும், அஞ்சலி நாயர் அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் மிளிர்கிறார். தனது முதல் படம் என்பது கூட தெரியாத அளவிற்கு தனது கதாபாத்திற்கு நீரோட்டம் பாய்ச்சிருக்கிறார். வெள்ளந்தி சிரிப்பு, சிமிட்டல், காதல், திமிரு, ஆணவம் என அனைத்திற்கும் பெயர் போனவளாக தான் வருகிறார் இந்த அஞ்சலி நாயர். ’அதற்குள் எதுக்கு உடம்புக்கு இப்படி அலையுற’ என்று நாயகன் நாயகி பார்த்து கேட்டதும், நாயகி அஞ்சலி நாயர் சோகமே மறு உருவமாக மாறி நம்மை அழவைத்து விடுகிறார். கதைக்கேற்ற சரியான பொருத்தம் அஞ்சலி நாயர். நிச்சயம் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார்.

அனைத்து கதாபாத்திரத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறார் செல்லையா (பூ ராம்). இத்தனை வருஷமா இந்த தமிழ் சினிமா ஏன் இந்த நடிகரை ஒதுக்கி வைத்துள்ளது என்று கேட்க தூண்டுகிறது.

Actor Poo Ramu in Nedunalvaadai Movie Stills

படத்தின் முதல் காட்சியில் நடந்து செல்லும் போது கீழே விழும் காட்சியில் ஆரம்பித்து இறுதி வரை நம் கண்கள் இவரை மட்டுமே சுற்றி சுற்றி வருகிறது. மகன் மட்டுமே வாரிசு இல்லை, மகளும் வாரிசுதான். ’பொட்ட புள்ளய நான் என்ன தவுட்டுக்கா வாங்குனேன்’, மகனுக்கு என்னவெல்லாம் செய்தோமோ அதையேதான் மகளுக்கும் செய்ய வேண்டும் என்று மகளுக்காகவும் பேரக்குழந்தைகளுக்காகவும் அவர் படும் இன்னல்கள் கொஞ்சம்நஞ்சம் இல்லை. சுட்டெரிக்கும் மண்வெட்டி பிடித்து விவசாயம் செய்யும், நம் ஒவ்வொருவரின் தாத்தாவையும் நிச்சயம் இவர் ஒரு காட்சியிலாவது நினைவுக்கு கொண்டு வந்து தான் செல்வார். ஒட்டுமொத்த கதையையும் தனது அமைதியான மெளனத்தால் அமைதியாக நகர்த்தி செல்கிறார் இந்த செல்லையா.

மற்றபடி, தாய்மாமனாக வரும் மைம் கோபி, நாயகனின் தாய், நாயகியின் அண்ணன் என அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரம்தான்.

வைரமுத்து வரிகளில் ஜோஸ் பிராங்க்ளின் இசை மனதை வருடுகிறது. பின்னனி இசை அருமை…

”கஞ்சிக்குள் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் கூடிப்போகும்
அது போல் நெஞ்சில் சேர்ந்தியே” போன்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் முணுமுணுக்க வைக்கின்றன.

எவ்வித எக்ஸ்ட்ரா வெளிச்சம் இல்லாமல் இயற்கை வெளிச்சத்தை மட்டுமே வைத்து படம் முழுவதும் ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமியை நிச்சயம் பாராட்டாமல் செல்ல முடியாது. நமது கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

திருநெல்வேலி வழக்குச்சொல், நம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது. பல இன்னல்களுக்கு நடுவில் இப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகளோடு நன்றிகளும் கூறலாம்.

நெடுநல்வாடை – நெடு நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வீசிய இதமான வாடை காற்று!

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker