
சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் ”பராசக்தி”. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சதீஸ் சூர்யா படத்தொகுப்பினை கவனித்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்…
1965 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தியே இதன் கதை நகர்கிறது.
1959 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ரயில்வே துறைக்கு பணிக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பொன்று வெளியாகிறது. அந்த அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தியில் இருக்கிறது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் கடும் போராட்டம் நடக்கிறது. சிவகார்த்திகேயன் தலைமையில் தமிழகத்தில் இந்தி பேசாத மற்ற மொழி சார்ந்த இளைஞர்களோடு சேர்ந்து புறநானூற்றுப்படை என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தனது போராட்டத்தை நடத்துகிறார்.

இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக ரயிலை தீவைத்து எரிக்கிறது புறநானூற்றுப்படை அமைப்பு. இந்த சம்பவத்தில் சிவகார்த்திகேயன் நண்பன் ஒருவர் இறந்துவிட, அதே ரயிலில் போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவியும் இருக்க, ரயிலை எரிக்க முயன்ற அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர் தனது கைவிரலை இழக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு போராட்டத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன் தனது தம்பி அதர்வா மற்றும் பாட்டி ஆகியோருடன் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் அப்பா இறந்து விட, அவர் வேலை பார்த்த ரயில்வே துறையில் சிவகார்த்திகேயனுக்கும் வேலை கிடைக்கிறது. மீண்டும் 1964 ஆம் ஆண்டு இந்திய எதிர்ப்பு போராட்டம் வெடிக்க ஆரம்பிக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் தம்பியான அதர்வா இந்தி திணிப்பை எதிர்த்து போராட களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு படத்தில் என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை…
அமரன் திரைப்படத்திற்கு பிறகு தனது திரைப்பட பயணத்தின் பாதையை மாற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் தனது அதிகபட்ச உச்ச நடிப்பை கொடுத்து அனைவரையும் வெகுவாகவே பாராட்ட வைத்திருக்கிறார். தனது தம்பி மீது வைத்த பாசத்தின் காரணமாக அவர் எடுக்கும் அதிரடி முடிவு, இந்தி திணிப்பிற்கு எதிராக சிவகார்த்திகேயன் எடுக்கும் அதிரடி முடிவுகள் மற்றும் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று ஆகியவற்றை அவர் வெளிக்கொணரும் தருணம் அவரது நடிப்பின் ஆற்றலை நன்றாகவே நம்மால் உணர முடிந்தது.

நடிகர் அதர்வாவும் படத்திற்கு மிகப்பெரும் தூணாக வந்து நிற்கிறார். இரண்டாம் பாதியை தனக்கானதாக ஆக்கிக்கொண்டு வில்லத்தனத்தில் மிரட்டி எடுத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. இப்படி ஒரு நடிப்பை எந்தப் படத்திலும் அவர் கொடுக்கவில்லை என்றே கூறி விடலாம். வில்லன் எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவிற்கு பல மடங்கு ஹீரோவின் முக்கியத்துவம் அதிகரிக்கும்… அதை இந்த படத்தில் தெளிவாக செய்திருக்கின்றனர்.
கதையின் நாயகியாக ஸ்ரீ லீலா முதல் பாதையில் வந்து செல்லும் கட்சியாக இருந்தாலும் கூட, இரண்டாம் பாதியில் நடிப்பிற்கான இடத்தை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் ஸ்ரீ லீலா. படத்தில் நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை இயல்பாக கொடுத்து கதாபாத்திரங்களாக வாழ்ந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக அண்ணாவாக நடித்திருந்த சேத்தனின் கதாபாத்திரம் மிகவும் தத்துரூபமாக இருந்தது. சுதா கொங்கராவின் மற்றொரு வலது கையாக இருந்து படத்தினை ஒரு படி மேலே தூக்கி நிறுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார்.பாடல்களிலும் பின்னணி இசைகளும் ஒரு தனித்துவத்தை கொடுத்திருக்கிறார்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு படத்தினை தாங்கி நிற்கிறது. இரவு நேர காட்சிகளை படமாக்கிய விதமாக இருக்கட்டும் ரயில் மீது நடந்த சண்டை காட்சிகளை படமாக்கி விதமாக இருக்கட்டும் இரண்டையுமே மிக நுணுக்கமாக தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார்.
1964ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஒரு வரலாற்று படைப்பாகவே பார்க்கும்படியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். ஆயிரம் புத்தகங்கள் அந்த கலவரத்தைப் பற்றி இருந்தாலும் கூட ஒரு காவியப் படைப்பாக திராவிடத்தை பற்றி அறியும் ஒரு படைப்பாகவும் இப்படம் இருக்கிறது.

சுதா கங்கிராவின் இயக்கம் படத்தினை பரபரப்பாகவே கொண்டு சென்றிருக்கிறது. எந்த இடத்திலும் கதை தொய்வடையாமல் கதையின் முக்கிய புள்ளியை நோக்கியே கதை நகர்ந்து கொண்டிருந்தது படத்திற்கு ஒரு பெரும் பிளஸ்…
ஒவ்வொரு காட்சியிலும் அப்படியான மெனக்கடல் அப்படியான உழைப்பு நன்றாகவே பார்க்க முடிந்தது. திரைக்கதையில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சுதா கொங்கரா.
மொத்தத்தில்,
பராசக்தி – மீண்டும் தீ பரவட்டும்




