Spotlightசினிமா

“இது சின்ன படம் இல்லை… முக்கியமான படம்!” – குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பாரிஸ் கஃபே’. இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா சாய், பிபின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சராஜ் சீலன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கே. கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

“வலுவான கருத்தை பேசும் படம்” – தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன், “‘பாரிஸ் கஃபே’ சிறிய பட்ஜெட்டில் உருவானாலும் வலுவான கருத்தை கொண்ட திரைப்படம். நம் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் போன்ற திறமையான நடிகர்கள் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமை” என்றார்.

மேலும், இயக்குநர் சராஜ் சீலன் தனது கணவர் என்றும், பல ஆண்டுகளாக இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் அவர் பயணித்து வந்ததாகவும், இப்படத்திற்காக அவர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

இணை தயாரிப்பாளர் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் பேசும்போது, சினிமாத்துறை தனக்கு புதிது என்றாலும், ‘பாரிஸ் கஃபே’ படத்தின் இயக்குநரின் பணியால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க விருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“23 வருட கனவை நனவாக்கியிருக்கிறார்” – சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் மித்ரன் ஜவகர், ஒரு இயக்குநருக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டதுடன், குரு சோமசுந்தரம் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது, இயக்குநர் சராஜ் சீலனின் நீண்டகால கனவை நனவாக்க நேர்மையும் விடாமுயற்சியும் தேவை என்றும், அது அவரிடம் இருப்பதாகவும் பாராட்டினார். மேலும், ‘பாரிஸ் கஃபே’ என்ற தலைப்பும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், படம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“இது சமூகத்திற்கு தேவையான படம்” – கௌசல்யா சங்கர்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கௌசல்யா சங்கர், படம் பார்த்த பிறகு ‘பாரிஸ் கஃபே’ சமூகத்திற்கு தேவையான திரைப்படம் என்பது புரிந்ததாக தெரிவித்தார்.

காதல், பெண்களின் உரிமை மற்றும் ஆணவப் படுகொலை போன்ற சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுவதாக குறிப்பிட்ட அவர், சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

“ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும். பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உடைத்து, மனிதர்களின் உரிமைகளைப் பற்றி பேசும் படமாக ‘பாரிஸ் கஃபே’ இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

நடிகர்களின் பாராட்டு

நடிகர் சாய் விக்கி பேசும்போது, பல ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த தனக்கு இந்தப் படத்தில் இயக்குநர் முக்கியமான வாய்ப்பை வழங்கியதாக தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் ஒரு வலுவான பிரச்சினையை மிகவும் மென்மையாக இப்படம் பேசுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகை அர்ச்சனா குமார், இது தனது மூன்றாவது படம் என்றும், பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்புக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக மனதில் வைத்திருந்ததாகவும், குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோலுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.

நடிகர் பிபின், ‘பாரிஸ் கஃபே’ தான் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான திரைப்படம் என்றும், கதையின் நேர்த்தி தன்னை கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் விஸ்வா, குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் போன்ற திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். சிறிய படங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அதற்காக தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

நடிகை அனுமோல் பேசும்போது, சமூகத்திற்கு தேவையான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும், ‘பாரிஸ் கஃபே’வும் அப்படிப்பட்ட முக்கியமான திரைப்படம் என்பதால் இப்படத்தில் நடித்ததாகவும் தெரிவித்தார். குரு சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அவருடன் ஏற்பட்டது அன்பான சண்டை என்றும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.

“கன்டென்ட் ஓரியண்டட் படம்” – குரு சோமசுந்தரம்

நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, இயக்குநர் சராஜ் சீலன் கதையை கூறியவுடன் தனக்கு மிகவும் பிடித்ததால் இப்படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

“‘பாரிஸ் கஃபே’ ஒரு கன்டென்ட் ஓரியண்டட் படம். இயக்குநரின் நீண்ட நாள் கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சி. பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பாக வளராது. கௌசல்யா போன்ற இன்னொருவர் உருவாகக்கூடாது. நாம் மாறினால்தான் எல்லாமே மாறும். இந்தப் படம் அதைப் பற்றித்தான் பேசுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

“எனது சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது” – இயக்குநர் சராஜ் சீலன்

படத்தின் இயக்குநர் சராஜ் சீலன் பேசும்போது, தனது சினிமா பயணம் ஆறு வயதில் தொடங்கியதாகவும், தனது தந்தை மூலமாகவே சினிமா மீதான ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாரதிராஜா, கே. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் உள்ளிட்ட இயக்குநர்களின் படைப்புகள் தன்னை பெரிதும் பாதித்ததாக கூறிய அவர், சினிமாவை படித்தும், பார்த்தும் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

தனது மகளை வைத்து எடுத்த ஒரு நிமிட குறும்படம் தேர்வான பிறகு, சினிமா மீதான தனது பார்வை மேலும் விரிவடைந்ததாகவும், அதன் பின்னர் சினிமாவே தனது வாழ்க்கை என்று முடிவு செய்ததாகவும் கூறினார்.

குரு சோமசுந்தரத்திடம் முதன்முறையாக கதையை கூறியபோது அவர் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும், அனுமோலிடம் தொலைபேசி மூலம் கதையை கூறியபோது அவரும் கதையை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும், படக்குழுவினர் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்கும், படத்தொகுப்பாளர் சாபு, கலை இயக்குநர் தாமு மற்றும் இசையமைப்பாளர் கே உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

சமூகத்தில் நிலவும் ஆணவப் படுகொலை, காதல், பெண்களின் உரிமை உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

🎬 படக்குழு

நடிகர்கள்: குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய் உள்ளிட்டோர்.

எழுத்து & இயக்கம்: சராஜ் சீலன்
ஒளிப்பதிவு: சதீஷ் ஜி
இசை: கே. கிருஷ்ணகுமார்
படத்தொகுப்பு: வி.ஜே. சபு ஜோசப்
கலை இயக்கம்: தாமு
பாடல்கள்: விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்
நடன அமைப்பு: ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்
மேக்கப்: கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்
ஆடை வடிவமைப்பு: கே. பராஹுல்
ஸ்டில்ஸ்: சிவா
ஒலி வடிவமைப்பு: ஹரி ஹரன்
பி.ஆர்.ஓ: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
இணை தயாரிப்பாளர்: வெங்கல் எம். லிங்கேஸ்வரன்
தயாரிப்பாளர்: கண்மணி ரங்கநாதன்

Facebook Comments

Related Articles

Back to top button