Spotlightவிமர்சனங்கள்

பட்டாம்பூச்சி – விமர்சனம் 3/5

த்ரி இயக்கத்தில் சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பட்டாம் பூச்சி. குஷ்பூ சுந்தர் சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சுந்தர் சி நாயகனாகவும் ஜெய் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

கதைப்படி,

வில்லன் ஜெய்’க்கு ஒருவகையான Disorder உள்ளது. இதனால், அவரை அனைவரும் ஒதுக்குகின்றனர். அவரது தந்தை, எப்பொழுதும் அடித்துக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில், ஒருவரை கொலை செய்த குற்றத்திற்க்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது ஜெய்க்கு.

இந்நிலையில், நான் அந்த கொலையை செய்யவில்லை, அதைவிடுத்து பட்டாம் பூச்சி என்ற பெயரில் 7 கொலைகள் தான் செய்திருக்கிறேன் என்று பத்திரிகையாளராக வரும் ஹனி ரோஸிடம் தெரிவிக்கிறார் ஜெய்.

போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத பட்டாம்பூச்சி கொலைகாரன் ஜெய்யா.? என்று அனைவரும் ஆச்சர்யத்தில் உறைகின்றனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, போலீஸாரால் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் சுந்தர் சி’யிடம் கொடுக்கப்படுகிறது.

தனது தந்தையை கவனித்துக் கொள்ள விடுப்பில் இருக்கும் சுந்தர் சி, ஜெய் வழக்கை விசாரணைக்கு எடுக்கிறார்.

ஜெய் தந்திரமாக விளையாடி 7 கொலைகளை தான் செய்யவில்லை என்று நீதிமன்றம் மூலமாக தீர்ப்பு வரவைத்து, தூக்குத் தண்டனையிலிருந்தும் விடுதலையாகி வெளியே வருகிறார்.

சுந்தர் சி’ மற்றும் ஹனி ரோஸ் இருவரையும் பகடைக்காயாக வைத்து வெளியே வந்து விடுகிறார் சைக்கோ கொலைகாரரான ஜெய். இவரின் சைக்கோ கொலை வேட்டை தொடர ஆரம்பிக்கிறது.

அதன்பிறகு சுந்தர் சி வில்லன் ஜெய்யை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சுந்தர் சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் இருட்டு என்ற படத்தில் மிகவும் பொருத்தமாக காட்சியளித்திருந்திருப்பார். ஆனால், இப்படத்தில் சுந்தர் சி’யை எந்த கோணத்தில் வைத்து பார்த்தாலும், அவருக்கு இந்த கேரக்டர் பொருத்தமானதாகவே தெரியவில்லை. இயக்குனரின் கண்களுக்கு மட்டுமே அது வெளிச்சம். பல இடங்களில் நடிக்கிறேன் எனக்கூறிக் கொண்டு நடிப்பது போன்று நடித்திருக்கிறார் சுந்தர் சி.

வில்லனாக ஜெய், ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும், அதன்பிறகு இவரது ஆட்டத்தை ஆட ஆரம்பித்ததும் ஓகே என்ற மனதோடு கதைக்குள் பயணிக்கிறார். பல இடங்களில் ஜெய்க்கு மாஸ் காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.

ஹனி ரோஸ் தனது கேரக்டரை தரமாக செய்து முடித்திருக்கிறார்.

வரிசையாக ஜெய் கொலை செய்து முடித்ததும் சுந்தர் சி எண்ட்ரீ கொடுப்பதெல்லாம் என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை. ஒருமுறை என்றால் கூட பரவாயில்லை. பல காட்சிகள் இப்படியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

படம் முழுவதும் சுந்தர் சி’யை விட ஜெய் தான் அதீத புத்திசாலியாகவும் பலசாலியாகவும் காட்டியிருக்கிறார்கள்.

சுத்தியலை வைத்து நாயகி ஹனி ரோஸ், ஜெய் மீது பல முறை அடித்தும், மீண்டும் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷாக வந்து நிற்கிறார் ஜெய்.

கரெண்ட் போயிடுச்சி, டார்ச் லைட்டுக்கு பேட்டரி போட்டு வந்து உன்னை கொலை பண்றேன், அதுவரைக்கும் வெயிட் பண்ணு என்று ஹனி ரோஸிடம் ஜெய் கூறியதும், திரையரங்கில் சிரிப்பலை எழுகிறது. என்னப்பா இது சீரியஸான காட்சிய பார்த்து இப்படி சிரிக்கிறீங்களேன்னு கேட்க தான் தோணுச்சி., அப்புறம் தான் தெரியுது அந்த சிரிச்ச கூட்டத்துல நாமளும் ஒருத்தன் தான்.

இமான் அண்ணாச்சியை ஜெய் கொலை செய்யும் காட்சியில், ”நான் ஓடி போய் தனியா ஒரு இடத்துல ஒளிஞ்சிக்கிறேன். அங்கு வந்து என்னை கொலை பண்ணிட்டு போய்டுடுன்னு ஜெய்யை அவரே அழைத்துச் செல்வது போல காட்சி கொண்டு சென்றிருப்பது..” என்னவென்று சொல்வது.?

படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் வாங்கிவிட்டதால், பல இடங்களில் ஆபாச வார்த்தைகளும் இரத்த காட்சிகளும், கத்தியை எடுத்து சதக் சதக்.. என்று குத்துவதும் என காட்சிக்கு காட்சி குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்கள்.

சைக்கோ கொலைகாரனின் கதையில், சில இடங்களில் லாஜிக் ஓட்டை எட்டிப் பார்த்ததாலும் ஒரு பரபரப்பான கதையாக பறந்து செல்கிறது இந்த பட்டாம் பூச்சி.

நவநீத் சுந்தரின் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. இவ்வளவு மிரட்டல் தேவையா என ஆங்காங்கே கேட்க தோன்றுகிறது.

கிருஷ்ணசுவாமி அவர்களின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். பத்ரி தனது இயக்கத்தில் இன்னும் பெரிதாகவே முயற்சி எடுத்திருந்திருக்கலாம்.

 லாஜிக் இல்லை என்றாலும் ஹாரர் த்ரில்லர் படத்தினை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Facebook Comments

Related Articles

Back to top button