Spotlightவிமர்சனங்கள்

பூச்சாண்டி விமர்சனம் – 3/5

ல வீடுகளில் பலரால் சொல்லப்பட்ட சொல்லப்படுகிற ஒரு வார்த்தை பூச்சாண்டி. குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காகவோ அல்லது தூங்க வைப்பதற்காகவோ பெரியவர்கள் “பூச்சாண்டி” என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

காரணமின்றி ஒரு வார்த்தையை முன்னோர்கள் புழக்கத்தில் விட்டுச் செல்ல மாட்டார்கள். “பூச்சாண்டி” யார்.? என்ற கேள்விக்கு பதில் தேடி பல வருட ஓட்டத்திற்குப் பிறகு அதை கண்டுபிடித்து மக்களிடையே இப்படத்தின் வாயிலாக சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ஜே கே விக்கி.

கதைப்படி,

நாயகன் முருகன் பழங்கால தொண்மையை பற்றியும், பேய் மற்றும் அமானுஷ்ய சக்தியை பற்றியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆராய்ச்சியை மலேசியாவில் நடத்தி வருகிறார். அங்கு சங்கர் என்பவரை சந்திக்கிறார். அவர், தனது நண்பர்களான அன்பு மற்றும் குருவுடன் இருக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை முருகனிடம் விவரிக்கிறார்.

அன்பு , குரு மற்றும் சங்கர் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அன்பு ஊன்முற்றவர். பண்டையகால  நாணயங்களை சேமித்து வருகிறார்.

இதில் ஒருநாள், ஒரு பண்டைய கால நாணயத்தை வைத்து ஆவியை வரவழைப்போம் என்று கூறி நண்பர்கள் மூவரும் அதன் மூலமாக ஆவி ஒன்றிடம் பேசுகின்றனர். அந்த அமானுஷ்ய சக்தி, தனது பெயர் மல்லிகா எனக் கூறுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அந்த நாணயத்தை வைத்து மல்லிகாவுடன் பேசிக் கொண்டு வருகின்றனர் மூவரும். ஒருநாள், மூவரில் ஒருவரான குரு இறந்துவிடுகிறார். அன்புவும் சங்கரும் அந்த அமானுஷ்ய சக்தி தான் குருவை கொன்றுவிட்டதாக எண்ணுகின்றனர்.

இதனையடுத்து, யார் அந்த மல்லிகா.? அந்த நாணயத்தின் மறுபக்கம் என்ன.? குருவின் சாவுக்கு யார் காரணம்.? என கணடறிய முருகனோடு பயணப்படுகின்றனர் அன்புவும் சங்கரும்.. இறுதியில் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

முருகனாக மிர்ச்சி ரமணா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தன் கண் பார்வையில் கூட மிரட்டி எடுக்கிறார் ரமணா. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு மிர்ச்சி ரமணா.

அடுத்ததாக சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் சாரதி கிருஷ்ணன் காமெடி, கோபம், படபடப்பு என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டிருக்கிறார். தனது நண்பன் இறந்ததை எண்ணி கோபம் அடையும் காட்சியாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது வில்லத்தனமான நடிப்பை கொடுப்பதிலாக இருக்கட்டும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் தினேஷ்.

குரு மற்றும் அன்புவின் கதாபாத்திரமாக நடித்த கணேஷன் மனோகரன் மற்றும் லோகன் நாதன் இருவரும் கதைக்கு சரியான தேர்வு தான். தனது கேரக்டரை ரசிக்க வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக வந்த ஹம்சினி பெருமாள். அழகான தேவதையாக வருவதிலும் அரண்டு மிரட்டுவதிலும் தனது நடிப்பில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

அருமையான கதையை எடுத்து அதை சரியான கண்ணோட்டத்தில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜே கே விக்கி. ஆரம்பம் முதலே இறுதி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்பையும் எதிர்பார்ப்பையும் படம் பார்ப்பவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். இசையில் ஆரம்பித்து ஒளிப்பதிவு வரை அனைத்தையும் நேர்த்தியான முறையில் கையாண்டு நம்மையும் கதையோடு பயணம் செய்ய வைத்திருக்கிறார்கள்.

வழக்கமான பேய் படமாக இல்லாமல், பண்டைய கால ஆராய்ச்சி நுணுக்கங்களைக் கொண்டு கதை நகர்வதால் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது இப்“பூச்சாண்டி”.

இனி தான் “புஷ்பா”வின் ஆட்டம் ஆரம்பம்,
இனி தான் “ராக்கி”யின் ஆட்டம் ஆரம்பம், என பெரிய படங்களில் இரண்டாவது பாகத்தை பார்த்தாக வேண்டுமே என்ற ஆவலை ஏற்படுத்திச் சென்றது போல், இனிதான் “பூச்சாண்டி” ஆட்டம் ஆரம்பம் என்று கதையை அடுத்த பாகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். நமக்கும் அடுத்த பாகத்தை பார்த்தாக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திச் சென்றதில் வென்றிருக்கிறார் இயக்குனர் ஜே கே விக்கி. க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சற்று தெளிவான விளக்கம் கொடுத்து நகர்த்தியிருந்தால் இன்னும் கூடுதல் ஈர்ப்பை பெற்றிருக்கும்.

Asalisham Bin Mohammed Ali அவர்களின் ஒளிப்பதிவு அட்டகாசம். குறிப்பாக அமானுஷ்ய சக்தி வெளிவரும் வேளையிலெல்லாம் ஒளிப்பதிவு தனிக் கவனத்தை பெறுகிறது.

Dustin Riduan Shah’ன் பின்னனி இசை அதிரடி காட்டியிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள அழகுற காட்சிகள் கண்களை கவர வைக்கின்றன.

இப்படம் தமிழகம் மட்டுமல்லாது மலேசியாவிலும் வரும் 27ஆம் தேதி வெளியிடப்படவிருப்பதாக Trium Stuido சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close