Spotlightசினிமாவிமர்சனங்கள்

பிரேமலு விமர்சனம் 3.5/5

கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் உள்ளீட்ட நட்சத்திரங்களின் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பிரேமலு.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் விஷ்ணு விஜய். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அஜ்மல் சபூ.

தயாரிப்பாளர்கள்: Fahadh Faasil, Dileesh Pothan, Syam Pushkaran

படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்

கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழக சினிமாவிலும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

இந்நிலையில், மார்ச் 15 முதல் தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் அநேக திரையரங்குகளில் வெளியாகிறது.

கதைக்குள் பயணப்பட்டு விடலாம்…

கல்லூரி படிக்கும் காலங்களில் ஒரு பெண்ணை ஒரு தலை காதலாக காதலித்து வருகிறார் நாயகன் நஸ்லேன். கல்லூரி காலம் முடிவடையும் நேரத்தில் அந்த பெண்ணிடம் காதலைக் கூற, அந்த காதல் தோல்வியில் முடிவடைகிறது நஸ்லேனுக்கு.

தொடர்ந்து, வெளிநாட்டில் பணிக்குச் செல்ல முயற்சித்து வருகிறார். இந்த சமயத்தில் கோர்ஸ் ஒன்று படிப்பதற்காக ஹைதராபாத் செல்கிறார் நஸ்லேன்.

அச்சமயத்தில், அங்கு சாப்ட்வேர் துறையில் பணியில் இருக்கும் மமிதா பைஜுவுடன் நட்பு ஏற்படுகிறது.

எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், யாருக்கும் பயப்படாமல், தனக்கு பிடித்தமான செயலை மட்டும் செய்து கொண்டு தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் கதாபாத்திரம் தான் மமிதா.

மமிதாவை பார்த்த மறுகணமே காதலில் விழுகிறார் நஸ்லேன். தொடர்ந்து அவருடன் பழகிக் கொண்டு வருகிறார்.

நஸ்லேவின் இந்த ஒரு தலை காதல் இரு தலை காதலானதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் நஸ்லேவின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் படத்திற்கு மிகப்பெரும் பலமாக நிற்கிறது. எந்த வித ஹீரோயிசமும் இல்லாமல் ஒரு ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கிறார் நஸ்லே.

நாயகி மமிதா படத்திற்கு மிகப்பெரும் பில்லராக வந்து நிற்கிறார். அவரது க்யூட்டான காட்சிகள் படத்தினை அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறது. அநேக இடங்களில் இவரது காட்சிகள் நன்றாக கைகொடுத்திருக்கிறது.

மற்றொரு பில்லராக வந்து நிற்கிறார் சங்கீத் பிரதாப். இவரின் காமெடிகள் பல இடங்களில் படம் பார்ப்பவர்களை சிரிப்பலைகளில் சிக்க வைத்துள்ளது. மேலும் படத்தில் நடித்த அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பும் பெரிதளவில் நம்மை கவர்ந்திழுத்திருக்கின்றன.

சின்ன சின்ன இடங்களில் கூட காமெடி காட்சிகளை கச்சிதமாக பொருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர். எந்த வித டபுள் மீனிங் வசனங்கள் இல்லாமல், இந்த கால இளைஞர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பின்னணி இசையாக இருக்கட்டும் பாடலாக இருக்கட்டும் இரண்டும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு காட்சிகளை அழகேற்றி கொடுத்திருக்கிறது. ஒருமுறைக்கு இரண்டு முறை கூட இப்படத்தை குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்.. இவ்வருடத்தில் வந்த சிறந்த படங்களில் பிரேமலு படம் டாப் 10ல் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிரேமலு – காதல் அரட்டை…

Facebook Comments

Related Articles

Back to top button