Spotlightவிமர்சனங்கள்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம் 3.5/5

மிழ் சினிமாவில் அழகிய வாழ்வியலை காட்டும்படியான படங்கள் அவ்வப்போது வந்து செல்லும். உதாரணமாக, சியான்கள், வாகை சூட வா, தொரட்டி, என மகுடம் சூட்டக்கூடிய படங்கள் ஒரு சில வந்து செல்வது வழக்கம் தான். அப்படியாக வந்த, இந்த “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்” மகுடம் சூட்டியதா இல்லையா என்று பார்த்து விடலாம்.

நாயகனாக மிதுன் மாணிக்கம், நாயகியாக ரம்யா பாண்டியன்.. மழை பொய்த்து போன பூச்சேரி என்ற கிராமத்தில் கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி நான்கு வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் தங்கள் வாழ்க்கையே இதுதான் என கருப்பன், வெள்ளையன் என்ற இரு காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

காளைகளை மாடு என்று சொன்னால், கோபம் வரும் அளவிற்கு அதன் மீது பாசம் கொட்டி வளர்த்து வருகின்றனர்.  பெற்ற மகன்களை போல் பார்த்து வருகின்றனர்.

ஒருநாள் அதிகாலையில் அந்த காளைகளை காணவில்லை. இருவரும் தவியாய் தவிக்கின்றனர். காடெல்லாம் தேடி அலைகின்றனர். இறுதியாக அந்த காளை மாடுகள் அவர்களிடம் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

இதற்குள் அந்த கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள், அரசியல், வாழ்வாதாரம், வாழ்வியல் என ஒட்டுமொத்தத்தையும் வெளிக்கொண்டுள்ள படம் தான் இந்த “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”

குன்னி முத்து கதாபாத்திரத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நாயகன் மிதுன் மாணிக்கம். காளைகளை தேடி அலையும் காட்சிகளாக இருக்கட்டும், அதனால் அவர் ஏற்படும் இன்னல்களாக இருக்கட்டும் அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து  நிலைநிறுத்தியிருக்கிறார்.

ரம்யா பாண்டியனும் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். மார்டன் கதாபாத்திரத்தை தேடி தேடி நடிக்கும் நடிகைகள் இருக்கும் இந்த கால சினிமாவில் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே ரம்யா பாண்டியனை வெகுவாக பாராட்டலாம்.

மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகன் அடிக்கும் டைமிங்க் காமெடிகள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிகழ்கால நமது வாழ்வியலை கேலிக்கூத்தாக்கியுள்ள அரசியல்வாதிகளை சுட்டி காட்டியிருக்கிறார். (அதானால் தான் என்னவோ சிரிப்பு எகிறி அடித்து வருகிறது)

அதுமட்டுமல்லாமல், படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழக அரசியலை அப்பட்டமாக காட்டியது போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதிலும், கருப்பு சட்டை அணிந்து “என் தம்பிகள்” என்று கூறி வரும் அரசியல்வாதியினை கலாய்த்து தள்ளியிருக்கிறார் இயக்குனர். அவர் மீது என்ன கோபமோ.? அந்த காட்சிகள் வரும் போது திரையரங்கே அதிரும் அளவிற்கு சிரிப்பலைகள் விண்ணை முட்டுகிறது.

இயக்குனர் அரசில் மூர்த்தியின் முதல் முயற்சிக்கு பெரும் பாராட்டுகள். இருந்தாலும் மிதுன் மாணிக்கம் குடும்பத்தினருக்கும் அந்த காளைகளுக்கும் இடையேயான ஒரு பாசப் பிணைப்பை இன்னும் அழுத்தமாகவே பதிவு செய்திருந்திருக்கலாம். இருவருக்குள்ளும் அந்த பாசம் ஒட்டியும் ஒட்டாமல் இருந்தது போல ஒரு உணர்வு. அதனால் தான் என்னவோ மீண்டும் காளைகளை மிதுன் மாணிக்கம் சந்திக்கும் போது நமக்குள் பெரிதாக ஒரு மகிழ்ச்சியின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தொலைக்காட்சி நிருபராக வாணி போஜன் நடித்துள்ளார். அழகான கதாபாத்திரத்தை அழகாகவே செய்து முடித்துள்ளார். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும் வாணி போஜன் மேடம்…

அடுத்த காட்சி இதுதான் என ரசிகர்களை யூகிக்க வைத்தது சற்று சறுக்கல்.

கிரிஷ் இசையமைப்பில் இரு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசை கதையோடு சேர்ந்து பயணம் புரிகிறது.

சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்தின் காட்சிகளை கனக்கட்சிதமாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறது.

சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

வரும் 24ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்  –  துணிச்சலான ஆட்டம்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close