“திட்டக்குடி” கண்ணன் ரவி தயாரிப்பில், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு, “கயல்” அனந்தி, பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சாரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இராவண கோட்டம்”.
கதைப்படி,
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேல்தெரு, கீழ்தெரு என இரு பிரிவினைகளை கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. அதில், மேல்தெருவின் தலைவராக பிரபுவும், கீழ் தெருவின் தலைவராக இளவரசுவும் நண்பர்களாக இருந்து சாதி பிரிவினை பார்க்காமல் ஊரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள்.
மேலும், அந்த ஊருக்குள் பிரிவினையை உண்டாகி அரசியல் லாபம் அடைய காத்திருக்கிறது, பி.எல்.தேனப்பன் மற்றும் அருள் தாஸ் தலைமையிலான அரசியல் அணி.
அதற்காக ஷாந்தனு மற்றும் அவரின் உயிர் தோழரான சஞ்சய் சாரா இருவரையும் பிரித்து ஊருக்குள் கலவரத்தை உண்டாக ஒருவரை ஏற்பாடு செய்கிறார் அருள் தாஸ்.
ஊர் தலைவரான பிரபு என்ன ஆனார்? நண்பர்களான ஷாந்தனு மற்றும் சஞ்சய்க்கு இடையில் என்ன நடந்தது? கருவேல அரசியல் எப்படி உள்ளே நுழைந்தது என பல கேள்விகளுக்கு பதில் படத்தின் இரண்டாம் பாதி.
பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் ஷாந்தனுவுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும். வெயில், புழுதி, மண் என பல கடினங்களை தாண்டி இப்படத்தில் அவர் கொடுத்திருக்கும் நடிப்பு பாராட்டை பெறுகிறது.
அழகு தேவதையாக வந்து கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் கயல் ஆனந்தி.
மேலும், ஷாந்தனுவின் நண்பராக வரும் சஞ்சய் சாராவுக்கு கதாபாத்திரவலு கொஞ்சம் அதிகம் தான். அதனை சிறப்பாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் சஞ்சய்.
ஜஸ்டின் பிரபாகரின் பாடல் ஹிட் ரகம். அவர் அமைத்திருந்த பின்னணி மட்டுமே படத்தை தாங்கியது.
சரியான கதையும், களமும் தேர்வு செய்துள்ளார் விக்ரம் சுகுமாரன். ஆனால், படத்தின் கதையை விரைவாக பேச ஆரம்பித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முதல் பாதி தொய்வாக இருந்தாலும். இரண்டாம் பாதி அனல் பறக்கும் வேகம் தான்.
ஆனால், அவர் பேச நினைத்த அரசியலை இன்னும் முழுமையாகவும் அழுத்தமாகவும் பேசியிருந்தால் சர்ச்சையை கிளப்பியிருந்தாலும். கருவேல அரசியல் பற்றி மக்களுக்கு முழு தெளிவு கிடைத்திருக்கும்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் வறண்ட பூமியை கூட அழகாய் ரசிக்கும் படி காட்சி படுத்தியுள்ளார்.
இராவண கோட்டம் – உண்மை கதையின் அழுத்தமான பதிவு