‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். பின்னணியில் பனி படர்ந்துள்ளது. காதல் மற்றும் கனவுலகங்களின் கலவையாக இது அமைந்துள்ளது.
இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
ஜூலை 30, 2021 அன்று இப்படம் வெளியாகவுள்ளது. பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் இதை தயாரித்துள்ளனர்.