
மாருதி அவர்களின் இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய்தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ராஜா சாப்.
இத்திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.
தாய் தந்தை இல்லாத பிரபாஸ் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தாத்தாவை நினைத்து தினம் தினம் கண்கலங்குகிறார் பாட்டி. இந்த கவலையினால் அவருக்கு ஞாபக மறதி அதிகமாகவே வந்து செல்கிறது.
ஒரு நாள் நண்பனின் செல்போனில் தனது தாத்தாவின் உருவத்தை பார்த்த பிரபாஸ் அவரைத் தேடி செல்கிறார். அவரை தேடிச் செல்லும் போது தாத்தாவை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் பிரபாஸுக்கு கிடைக்கிறது. பல மாய வித்தைகளை கற்றுக் கொண்ட தாத்தா சஞ்சய் தத் என்பதை பிரபாஸ் அறிந்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் பிரபாஸுக்கும் சஞ்சய் தத்துக்கும் இடையே மோதல் நிலவ ஆரம்பிக்கிறது. எதற்காக இந்த மோதல்.? எப்படி இது முடிந்தது.? என்பதே படத்தின் மீதி கதை.
எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல் ஏனோ தானோ என்று வந்து சென்று நடித்திருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்து விட்டார் நடிகர் பிரபாஸ். நடிப்பில் எந்த ஒரு முதிர்ச்சியும் தெரியவில்லை. காட்சிகளுக்கு காட்சி பில்டப் மட்டுமே கொடுத்து படத்தினை நகர்த்திச் சென்று இருக்கிறார் பிரபாஸ். கதையிலும் பெரிதான மெனக்கெடல் கொடுத்த மாதிரியும் தென்படவில்லை.
படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தும் எந்த கதாநாயகிக்கும் அழுத்தமான கதாபாத்திரமாக கொடுக்கப்படவில்லை. அவர்களை காட்சிப் பொருளாகவே படத்தில் பயன்படுத்தியுள்ளனர். பாழடைந்த பங்களாவிற்குள் அடைபட்டுக் கொள்ளும் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப்போன ஒரு கதையைத்தான் இதில் வைத்திருக்கிறார்கள். கிராபிக்ஸ், பணிகள்,வி எஃப் எக்ஸ் பணிகள் படத்தில் மிகவும் கொடுமையானது இருந்தது. ஒளிப்பதிவு சற்று ஆறுதல் கொடுத்தாலும் தமனின் பின்னணி இசை காதை கிழித்து விடுகிறது. பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம் தான். படத்தின் நீளம் படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் என்றே கூறலாம். முதல் பாதி தான் ஏனோ தானோ என்று செல்கிறதே இரண்டாம் பாதியாவது நமக்கு கை கொடுக்கும் என்று எண்ணி இருந்தால் அதுவும் நம்மை காலை வாரி விட்டிருக்கிறது. படத்தின் நீளத்தை நன்றாகவே குறைத்திருக்கலாம். பிரம்மாண்டத்தின் பிரதிபலிப்பு படத்தில் எந்த இடத்திலும் கைகொடுக்கவில்லை.
மொத்தத்தில்,
ராஜா சாப் – நேர விரயம்





