
அறிமுக இயக்குனர் மகா கந்தன் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு ,வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ராஜபுத்திரன்”.
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்ய, எஐஎஸ் . நௌஃபல் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பாடல்கள் வைரமுத்து, மோகன் ராஜன் உள்ளிட்டோர் எழுத கலை இயக்கத்தை ஐயப்பன் கவனித்திருக்கிறார்.
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் K.M சபி படத்தினை தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர்கள்: T. பாரூக்கு மற்றும் K. கோதர்ஷா
கதைக்குள் பயணிக்கலாம்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் படத்தின் கதைக்களம். தனது மகன் வெற்றி (பட்ட முத்து) மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் பிரபு (செல்லையா).
மகனை எங்கும் வேலைக்கு அனுப்பாமல், தனது ஊரிலேயே தனது கண்பார்வையிலேயே வளர்த்து வருகிறார் பிரபு. விவசாயமும் பொய்த்து போய்விட, வட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் பிரபு.

அப்பாவின் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத வெற்றி, அப்பாவிற்கு தெரியாமல் வில்லனான கோமல் குமார் (லிங்கா) இடம் வேலைக்குச் செல்கிறார்.
இங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், தங்களது குடும்பத்திற்கும் அனுப்பும் பணமானது வரிகட்டாமல் அனுப்பி வைக்க நினைப்பவர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு, வீட்டிற்கு அவர்களின் பணத்தைக் கொண்டு சேர்க்கும் ILLEGAL வேலை பார்த்து வருகிறார் கோமல் குமார்.
அப்படியாக, அந்த பணத்தை கோமல் குமாரிடம் பெற்றுக் கொண்டு, அதை கவனமாக குடும்பங்களுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார் வெற்றி.
இந்த நிலையில், நாயகி கிருஷ்ணபிரியாவை (பூச்செண்டு) காண்கிறார் வெற்றி. கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறார். நாளடைவில் வெற்றி மீதும் கிருஷ்ண பிரியாவிற்கு காதல் மலர்கிறது.
வாழ்க்கையானது சுமூகமாக சென்று கொண்டிருக்க, கோமல் குமாரின் பணத்தை எடுத்துச் சென்று பணக்கடத்தலில் ஈடுபடும்போது வெற்றியின் பணத்தை ஒருவர் கொள்ளையடித்துவிட, கோமல் குமாரின் கோபத்திற்கு ஆளாகிறார் வெற்றி.

விஷயம் அறிந்த பிரபு, தனது வீட்டு பத்திரத்தை வைத்து வெற்றியை கோமல் குமாரிடம் இருந்து மீட்டு வருகிறார்.
இதன்பிறகு, வெற்றியின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
சில படங்களுக்குப் பிறகு வெற்றியின் எளிமையான நடிப்பையும், வெறித்தனமான உழைப்பையும் இப்படத்தில் காண முடிந்தது. ஒவ்வொரு காட்சியிலும் வெற்றியின் அர்ப்பணிப்பை நன்றாகவே உணரவும் முடிந்தது. முழுக்க முழுக்க வெயில் சார்ந்த பகுதிகளில் படத்தினை படமாக்கியிருக்கிறது படக்குழு. அந்த வெட்ட வெயிலில் நடந்த சண்டைக் காட்சியாக இருக்கட்டும், ரெளடிகளை துரத்திக் கொண்டு ஓடும் காட்சியாக இருக்கட்டும், சாலையில் காதலியோடு சாதாரணமாக செல்லும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் வெற்றியின் உழைப்பை நன்றாகவே பாராட்டலாம்.
மற்றொரு நாயகனாக கதையின் முக்கிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார் பிரபு. இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகவும் கச்சிதமாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார் பிரபு. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் நடனமும் ஆடியிருக்கிறார் இளைய திலகம்.
தனது அறிமுக படத்திலேயே அனைவரையும் வியந்து பாராட்டும்படி தனது நடிப்பின் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி கிருஷ்ணபிரியா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையிலும் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பாடல் காட்சியிலும் தனது காதலை வெற்றியிடம் இறுக்கமாக பற்றிக் கொள்ளும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியிலும் அசர வைத்திருக்கிறார் கிருஷ்ணபிரியா. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிக்கும் திறமை கொண்ட ஒரு நடிகை கிடைத்திருக்கிறார் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி தான்.

தொடர்ந்து வில்லனாக நடித்த கோமல் குமாருக்கு அதிகப்படியான பில்-டப் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கொடுக்கும் பில்-டப்களுக்குபொருத்தமாக தான் இருக்கிறார் கோமல் குமார். தொடர்ந்து லிவிங்க்ஸ்டன், ஆர் வி உதயகுமார், மன்சூர் அலிகான் என படத்தில் தோன்ற இவர்களும் அவர்களுக்கான கதாபாத்திரத்தை மிகவும் அளவாக செய்து முடித்திருந்தனர்.
தங்கதுரை மற்றும் வெற்றியின் உடன் நடித்த கணபதி என இருவருமே படத்திற்கு மிகப்பெரும் பில்லராக இருக்கின்றனர். தங்கதுரையின் காமெடி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
இசையமைப்பாளர் எஐஎஸ். நௌஃபல் ராஜாவை படத்தின் மற்றொரு நாயகன் என்றே கூறலாம். படத்தின் ஆகாசத்த தொட்டாச்சி பாடல் ரசிக்கும்படியாக இருந்தது. பின்னணி இசையில் தனி ஒரு சாம்ராஜ்யத்தை நிகழ்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவானது இராமநாதபுர மாவட்ட அழகை அழகாக திரையில் காட்டியிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குனரின் உழைப்பும் வீணாகவில்லை.
அப்பா – மகன் இருவருக்குமான பாசப் பிணைப்பை ஒரு வாழ்வியல் கலந்த திரைக்கதையோடு மிகவும் அழகாக நகர்த்திச் சென்று ஒரு தரமான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கல்விக்கான முக்கியத்துவத்தையும் ஒருவரியில் சொல்லிச் சென்றிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சி ஹார்ட் டச் தான்.
கதாநாயகிக்கு படத்தில் நல்லதொரு முக்கியத்துவத்தைக் கொடுத்து காட்சிகளை நகர்த்திச் சென்றதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம். ஒரு சில குறைகள் படத்தில் எட்டிப் பார்த்தாலும், நிறைகள் அவற்றை கண்டு கொள்ள வைக்கவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப பாங்கான ஒரு படத்தை திரையில் காண்பது கூடுதல் மகிழ்ச்சி தான்.
மொத்தத்தில்,
ராஜபுத்திரன் – வெற்றி புத்திரன்..





