
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட்”
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக் குமார். எடிட்டிங் செய்திருக்கிறார் பரத் விக்ரமன்.
இசையை ஆஃப்ரோ கவனித்திருக்கிறார். ஆர்யா படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் சென்று விடலாம்…
சினிமா விமர்சகரான சந்தானம், வருகின்ற அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதாவது, நெகடிவாக விமர்சனம் செய்து பிரபலமானவர்.
இவரின் அப்பா நிழல்கள் ரவி அம்மா கஸ்தூரி தங்கை யாஷிகா ஆனந்த் மற்றும் காதலி கீதிகா திவாரி வருகின்றனர்.
சந்தானத்திற்கு மர்மமான பார்சல் ஒன்று வருகிறது. அந்த பார்சலில் டிக்கெட் அனுப்பப்பட்டு, குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க வருமாறு அழைப்பு இருக்கிறது.
ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்கிற்கு பகலில் செல்லும் சந்தானம், அது பல வருட பழைய திரையரங்கு என்று கண்டறிந்த சந்தானம் ஏதோ தவறாக இருக்கிறது என்றெண்ணி, அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
இவர் வீட்டிற்கு வருவதற்குள் இரவாகிவிட, அதற்குள் அவரது குடும்பம் திரையரங்கிற்குச் சென்று விடுகிறது. இப்போது திரையரங்கமே சீரியல் வெளிச்சத்தால் மின்ன, திரையரங்கிற்குள் சென்று விடுகின்றனர் சந்தானத்தின் குடும்பமும் அவரது காதலியும்.
இந்நிலையில், அங்கு ஆவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வராகவன், சினிமாவை நெகடிவாக விமர்சனம் செய்பவர்களுக்கு தான் தண்டனை கொடுப்பேன் என்று சந்தானத்தின் குடும்பத்தை ஒரு பிரம்மாண்ட கப்பலுக்குள் கொண்டு போய் விட்டு விடுகிறார்.
அங்கு அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாத வண்ணம் இருக்கிறார்கள்.. கப்பலின் கேப்டனாக நிழல்கள் ரவி, திருடியாக கஸ்தூரி, அங்கு மார்டன் உடையில் நடனமாடுபவராக யாஷிகா என மாற்றி விடுகிறார் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து, சந்தானத்தையும் அதே கப்பலில் கொண்டு விட்டுவிடுகிறார் செல்வராகவன்.
அதன்பிறகு தன் குடும்பத்தை சந்தானம் எப்படி காப்பாற்றினார்.? தன் காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
டிடி என்ற டைட்டிலுக்காகவே படத்திற்கு மிகப்பெரும் ஓபனிங் கிடைக்கும். அந்த அளவிற்கு டிடி படங்களின் பாகங்கள் அப்படியான காமெடி சரவெடியை நமக்குத் தந்தவர் நடிகர் சந்தானம். அப்படியான பெரும் ஹிட் கொடுத்து விட்டு எப்படி இப்படியொரு படத்தை சந்தானத்தால் கொடுக்க முடிந்தது என்று எண்ண வைத்துவிட்டார் சந்தானம்.
டிடி பாகங்களின் படத்திற்கும் இப்படத்திற்கும் துளியளவு கூட சம்பந்தம் இல்லையே என்ற எண்ணத்தை வரவைத்திருக்கிறார்கள். எப்பதான் காமெடி பண்ணுவீங்க என்று படம் பார்ப்பவர்கள் ஏங்கும் அளவிற்கு நம்மைக் கொண்டு சென்று விட்டனர்.

கடந்த சில வருடங்களாக படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்தினால், ஹிட் ஆகிறது என்ற ட்ரெண்டிங் இருக்கிறது. அந்த பாணியை இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இதில் சோகம் என்னவென்றால், எந்த பாடலும் வொர்க் அவுட் ஆகாமல் போனது தான்.
”வாட் ப்ரோ… என்ன ப்ரோ” என டையலாக்கை நிறுத்தி நிறுத்தி கூறி பொறுமையை அதிகமாகவே சோதித்து விட்டார் சந்தானம். இது தான் க்ளைமாக்ஸ் போல என்று காத்திருந்தால், அடுத்து ஒரு காட்சி வந்து படம் நீண்டு கொண்டிருக்கிறது. எந்த இடத்தில் படத்தினை முடிப்பது என்று இயக்குனருக்கே பெரிய குழப்பம் ஏற்பட்டு விட்டது போல…
நாயகியின் நடிப்பானது படத்தில் துளியளவும் ஒட்டவில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சில ஆங்கில சோம்பி படங்களின் பிரதிபலிப்பை இப்படத்தில் நன்றாகவே காணலாம்.
படத்தில் நமக்கு சற்று ஆறுதல் என்னவென்றால் அது மொட்டை ராஜேந்திரன், மாறன் மற்றும் நிழல்கள் ரவியின் காமெடிகள் மட்டும் தான். ஒரு சில இடங்களில் காமெடி செய்ய ட்ரை செய்திருக்கிறார்கள். அது சற்று கைகொடுத்திருக்கிறது.
முதலில் தியேட்டர், அதன்பிறகு கப்பல், அதன்பிறகு தீவு என நம்மை சுற்றலில் விட்டு மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஆக்கிவிட்டது இந்த படம்.,
தியேட்டருக்குள் செல்லும் போது ஒரு ஸ்டோரி, கப்பலில் இருக்கும் போது வேறு ஒரு ஸ்டோரி, தீவுக்குள் சென்றபின்பு வேறு ஒரு ஸ்டோரி … என்ன தான் சொல்றது.
இதற்கு முன் வந்த டிடி பாகங்களில், ஒரு பழைய பங்களாவிற்குள் அனைத்து காமெடியையும் ஒளித்து வைத்தாற் போல், நிமிடத்திற்கு நிமிடம் நம்மை சீட்டில் அமர விடாமல் துள்ளிக்குதித்து ரசிக்க வைக்கும் காமெடியை அள்ளிக் கொடுத்திருக்கும் சந்தானம், இப்படத்தில் அதற்கான மெனக்கெடல் என்பது துளியளவும் இல்லாதது பெரும் ஏமாற்றம் தான்.
இதில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மீது சந்தானத்திற்கு என்ன கோபமோ தெரியவில்லை… அவரையும் படத்தில் சேர்த்துக் கொண்டு டேமேஜ் செய்து வைத்திருக்கிறார் சந்தானம்.
கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் இருவருமே ஓவர் ஆக்டிங் தான்..
தீபக் குமாரின் ஒளிப்பதிவு ஆறுதல் அளிக்கிறது. ஆஃப்ரோவின் இசை பெரிதாக மனதில் நிற்கவில்லை.
மொத்தத்தில்,
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் – சந்தானத்தை வைத்து ஆர்யா போட்ட கணக்கு தப்பாய் போனது…





