
இயக்கம்: தன்ராஜ் கொரனானி,
நடிகர்கள்: சமுத்திரக்கனி, பிரமோதினி,தன்ராஜ் கொரனானி,மோக்ஷா, சுனில், ஹரீஸ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி,பிரித்விராஜ்.
இசை: அருண்சிலுவேறு
ஒளிப்பதிவு: துர்கா கொல்லிபிரசாத்
தயாரிப்பு: ப்ருத்வி போலவரபு
பாடல்கள் : யுகபாரதி, முருகன்மந்திரம்
தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் படம் தான் இந்த ராமம் ராகவம்.
கதைப்படி,
அப்பாவாக சமுத்திரக்கனியும் அம்மாவாக பிரமோதினியும் வருகிறார்கள். இவர்களுக்கு மகனாக வருகிறார் கதையின் நாயகனான தன்ராஜ் கொரனானி.
சிறுவயதிலிருந்தே தனது மகன் மீது அளவு கடந்தபாசம் வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அரசாங்க அதிகாரியான சமுத்திரக்கனி, நேர்மையின் சிகரமாக எந்த இடத்திலும் லஞ்சம் வாங்காமல் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
தன்ராஜ் கொரனானி மருத்துவராக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட சமுத்திரக்கனிக்கு கிடைத்ததோ ஏமாற்றம் தான். பள்ளி படிப்பிலேயே சிகரெட் பிடித்துக் கொண்டு சரியாக படிக்காமல் ஊரை சுற்றிக் கொண்டும், சூதாட்டம் ஆடிக் கொண்டும் இருக்கிறார் தன்ராஜ்.
தனது மகனை நினைத்து தினம் தினம் மனம் வெதும்பிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. இன்று திருந்திவிடுவான், நாளை திருந்தி விடுவான் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி.
ஒருநாள் நல்லவான இருக்க, அடுத்தநாளே தனது மோசடி வேலையை செய்துவிடுகிறார் தன்ராஜ்.
இந்த சூழலில், சொத்து முழுவதும் தனக்குக் கிடைக்க, தந்தையின் வேலையும் தனக்கு கிடைக்க வேண்டுமென்றால் சமுத்திரக்கனி இறந்தால் மட்டுமே அது நடக்கும் என்றறிந்து, தனது தந்தையை கொலை செய்ய முடிவெடுக்கிறார் தன்ராஜ்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
வழக்கம்போல் நேர்மையான தந்தையாக வந்து கம்பீரமாக நிற்கிறார் சமுத்திரக்கனி. இந்த கதாபாத்திரத்திற்கு தமிழ் சினிமாவில் இல்ல இந்திய சினிமாவிலேயே ஆள் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு மிக கச்சிதமாக அக்கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.
தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று அவனை கையில் ஏந்தும் இடத்தில் ஆரம்பித்து, தனக்கான வாழ்க்கையை வாழாமல் தனது மகனுக்கான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு எளிமையான தந்தையாக கண்ணில் ஈரம் வரும் வரை நடித்து அசத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.
மகனாக நடித்த தன்ராஜ் கொரனானி யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று நடிப்பை குறைத்திருக்கலாமே என்றும் கூற வைத்துவிட்டார்.
அம்மாவாக நடித்த பிரமோதினியும் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.
மிகவும் மெல்லிய ஒரு கதையை கையில் எடுத்து அதை தெளிவான ஒரு திரைக்கதை அமைத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனரான தன்ராஜ் கொரனானி. அப்பா மீதுள்ள வெறுப்பானது ஒரு கட்டத்தில் கோபமாக கொப்பளித்து அது கொல்வதற்குக் கூட செல்ல வைக்கும் என்ற அளவிற்கான திரைக்கதை நேர்த்தியானது.
மேலும், படத்தில் வசனங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வைத்தது. எளிமையான கதை என்றாலும் அதை கொண்டு சென்ற விதம் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற வைத்துவிட்டது.
அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரது கண்களிலும் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.
அப்பா – மகன் இருவருக்குமிடையே இருக்கும் பாசமானது எப்படியானது என்பதை ஒரு காவியமாக படைத்த இயக்குனருக்கு பராட்டுகள்.
பின்னணி இசை படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது.
ராமம் ராகவம் : அப்பா – மகன் உறவின் மகத்துவம்..