Spotlightவிமர்சனங்கள்

சாவீ – விமர்சனம் 3/5

எழுத்து & இயக்கம்: ஆண்டனி அஜித்

நடிகர்கள்: உதயா தீப், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாத்ரி.

இசை : சரண் ராகவன் & விஜே ரகுராம்

ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்

தயாரிப்பு: ஆண்டனி அஜித் ப்ரொடக்‌ஷன்ஸ்

கதாநாயகன் உதயா தீப், தனது மாமன் மகளான கவிதா சுரேஷை காதலிக்கிறார். கவிதா சுரேஷும் உதயாவை காதலிக்கிறார். ஆனால், கவிதாவின் அப்பாவான ப்ரேம் கே சேஷாத்ரி இந்த காதலை ஏற்க மறுக்கிறார்.

தனது அப்பாவை ப்ரேம் கே சேஷாத்ரி தான் கொன்றார் என்றும் உதயா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஒருநாள் விபத்து ஒன்றில் சிக்கி ப்ரேம் கே சேஷாத்ரி இறந்துவிடுகிறார்.

இறுதி காரியம் செய்வதற்காக வீட்டிற்கு உடலை எடுத்து வருகின்றனர். இரவாகிறது. உடலை பார்க்க சொல்லி உதயாவிடம் பொறுப்பைக் கொடுத்து, அனைவரும் தூங்கி விடுகின்றனர்.

உதயாவும் சற்று அலுப்பில் அசர, உடலை யாரோ எடுத்துச் சென்று விடுகின்றனர். சற்று நேரத்தில் இறந்தவர் உடல் இல்லை என்றதும் அந்த இடமே பரபரப்பாகிறது. உதயாவை அனைவரும் சந்தேகிக்கின்றனர். இதனை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டரான ஆதேஷ் பாலா.

இறுதியில் அந்த உடலை ஆதேஷ் பாலா கண்டுபிடித்தாரா இல்லையா.? உதயா – கவிதா இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனான உதயா தீப், கலகலப்பாக தனது கேரக்டரை எடுத்துச் சென்றிருக்கிறார். எதனையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அலட்டிக் கொள்ளாத நடிப்பால் அனைவரையுமே கவர்ந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் சற்று கதாபாத்திரத்தின் வலுவை அறிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நடிப்பை வழங்கியிருந்திருக்கலாம்.

இரண்டாம் கதாநாயகனாக படத்தில் தோன்றி தனக்கான கதாபாத்திரத்தை நச்’சென செய்துமுடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா. இந்த கதைக்கு இந்த கதாபாத்திரத்திற்கு இது போதும் என மீட்டர் அறிந்து அதனை அளவாக கொடுத்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

நாயகியான கவிதா சுரேஷ், தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்துமுடித்திருக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களது கேரக்டர்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றனர். ஆங்காங்கே காமெடி காட்சிகள் படத்திற்கு நல்லதாகவே கைகொடுத்திருக்கிறது. பிணத்தை காணவில்லை என்ற மையப்புள்ளியை கையில் எடுத்து அதை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இருந்தாலும் காமெடியில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம். பிணத்தை யார் எடுத்திருப்பார்.? க்ளைமாக்ஸ் காட்சி இரண்டுமே படத்தில் பெரிய ட்விஸ்ட் தான். இந்த பிரச்சனை எல்லாம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு இயக்குனர் கொடுத்த விளக்கம் பலே பலே..

ப்ரேம் கே சேஷாத்ரியின் மூத்த சகோதரராக வரும் நபர் எப்படி இறந்தார் என்பதெல்லாம் காமெடியில் சற்று தூக்கல்தான்..

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றன.

மொத்தத்தில்,

சாவீ – காமெடி வெடி..

Facebook Comments

Related Articles

Back to top button