Spotlightவிமர்சனங்கள்

சுழல் – விமர்சனம் 4/5

ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், நிவேதிதா சதிஷ், ஹரீஷ் உத்தமன் நடிப்பில் இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்பில் உருவாகியிருக்கும் தொடர் தான் “சுழல் தி வோர்டெக்ஸ்”. இத்தொடர் ஜுன் 17 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. எட்டு தொடர்களாக உருவாகி இருக்கும் இத்தொடர் எந்த வகையான சுழலை கொடுத்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் கண்டுவிடலாம்.

கதைப்படி,

ஊரில் இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தொழிற்சங்கத் தலைவராக வருகிறார் பார்த்திபன். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொழிற்சாலை முன்பு ஆலை ஊழியர்களுடன் போராட்டம் செய்கிறார் பார்த்திபன். அப்போது, அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயா ரெட்டி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர் உள்ளிட்ட போலீஸார் ஊழியர்களை அடித்து விரட்டுகிறார்கள். ஊரில் அன்று அங்களம்மனுக்கு மசான கொள்ளை முதல் நாள் திருவிழா ஆரம்பமாகிறது.

அன்று இரவே, சிமெண்ட் தொழிற்சாலை தீப்பிடித்து எரிகிறது. ஊரே சோகத்தில் மூழ்கிறது. இது ஒருபுறம் நடக்க, அதே இரவில் பார்த்திபனின் இரண்டாவது மகள் தொலைந்து போகிறாள். தனது தங்கையை கண்டுபிடிக்க கோயம்புத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிமெண்ட் தொழிற்சாலை தீப்பற்றி எரிய காரணம் யார்.? தொலைந்து போன பார்த்திபனின் மகள் கிடைத்தாரா.? என்பதே இத்தொடரின் மீதிக் கதை.

நாத்திகம் பேசி தொழிலாளர்களின் நலனுக்காக போராடும் ஒரு போராளியாக வரும் பார்த்திபன், தனது கேரக்டரை நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். தனது மகள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில், கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார் பார்த்திபன்.

தொலைந்து போன தங்கையை தேடி அலையும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லும் போதாக இருக்கட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் அவதாரமாக தோன்றுவதாக இருக்கட்டும் என தனது நந்தினி கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் சோர்வடைய வைக்காமல் செய்து முடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரேயா ரெட்டி, காக்கி உடையில் மிடுக்கென மிளிர்கிறார். தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்திருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு, நடிப்பிற்கு சரியான தீணி கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது இந்த “சுழல்”.

சப் இன்ஸ்பெக்டராக வரும் கதிர் தான், ஒட்டுமொத்த இன்வஸ்டிகேசனையும் நடத்தி முடிக்கிறார். தனக்கு மீறிய ஒரு கதாபாத்திரம் தான் என்றாலும், அதை உணர்ந்து தன்னால் இயன்ற வரை தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார் கதிர். ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவனாகவே சுமந்து சென்று கரை சேர்த்திருக்கிறார் கதிர். மன உழைப்பு முதல் உடல் உழைப்பு வரை கொடுத்து தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் கதிர்.

படத்தின் பெரிய பலமே கதை தான். சுழல் என்ற படத்தின் தலைப்புக்கேற்றவாறு புஷ்கர் – காயத்ரியின் கதையில், கதை முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து, ரசிக்க வைத்துவிட்டனர் இருவரும்.

கதை இதை நோக்கி தான் செல்கிறது என்று எண்ணும் போது, திடீரென வேறொரு பக்கம் சென்று நம்மை பயணப்பட வைத்திருக்கிறது. அங்காளம்மனின் 9 நாட்கள் மசான கொள்ளை திருவிழா நடக்கும் சமயத்தில், அத்திருவிழாவையே மையமாகக் கொண்டு கதை நகர்வது நமக்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நகர்வாக வந்து, இறுதியாக சமுதாயத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனையை கையில் எடுத்து அதை பேசியிருப்பது பலம்.

வளரும் பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்படும் நஞ்சு, பின்னாளில் அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அழுத்தமாக பதிய வைத்திருக்கும் ஒரு படைப்பாக உருவாகியிருக்கிறது இந்த “சுழல்”.

ஹரீஷ் உத்தமன், பிரேம்குமார், பார்த்திபனின் மனைவி, அவரது இரண்டாவது மகள் நிலா, இவரது தோழி, ஸ்ரேயா ரெட்டியின் மகனாக வந்த அதிசயம், பார்த்திபனின் தம்பியாக வரும் இளங்கோ குமரவேல், இவரின் மனைவியாக லதா ராவ், ஹரீஷ் உத்தமனின் தந்தை, கோவில் பூசாரி என படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் உற்று நோக்க வைத்துவிட்டனர். தனது அனுபவ நடிப்பை மிதமாக கொடுத்து அனைவரிடத்திலும் கைதட்டல் பெறுகிறார் சந்தன பாரதி.

கதாபாத்திரங்களின் தேர்வு நச்.

இந்த தொடர் முழுவதையும் இயக்கிய பிரம்மா மற்றும் அனுச்சரண் இருவரையும் அதிகமாகவே பாராட்டலாம். 9 நாட்கள் திருவிழாவை காட்சிப்படுத்திய விதமாக இருக்கட்டும், விசாரணை செல்லும் விதமாக இருக்கட்டும் என கதையை ஓட்டம் பிடிக்க வைத்ததில் இவர்களது இயக்கம் பெரும் பலம் தான்.

ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு மெனக்கெடலோடு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் முகேஷ்வரன். திருவிழா, மலை குவாரி காட்சிகளை பிரம்மிப்பாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை மேஜிக் இப்படத்திலும் நிகழ்ந்திருக்கிறது. திருவிழாவில் ஆட்டம் போட வைக்கவும் செய்திருக்கிறார், சில இடங்களில் பயமுறுத்தவும் செய்திருக்கிறார். மிரட்டலான இசையை கொடுத்து சுழலுக்கு தூணாக நின்றிருக்கிறார் சாம்.

ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங்க் ஷார்ப்பாக இருப்பது கூடுதல் பலம். எட்டுத் தொடராக வெளிவர இருக்கும் இந்த வலைதொடர் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.

படம் பார்ப்பவர்களின் பார்வையை பலவிதமாக சுழலவிட்டு, தனது பாதையில் நச்சென இச்”சுழல்” பயணப்பட்டிருப்பது பலம்.

Facebook Comments

Related Articles

Back to top button