
இயக்கம்: அறிவழகன்
நடிகர்கள்: ஆதி, லஷ்மி மேனன்,சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜிவ் மேனன், விவேக் பிரசன்னா
இசை: தமன்
ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன்.
தயாரிப்பு: 7ஜி சிவா
கதைக்களம் மூணார். தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள பழமைவாய்ந்த நூலகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இறந்து போனவர்களின் உடல்கள் கோணலாகவும் உடல்கள் மோசமான நிலையில் சிதையவும் செய்கிறது. இதனால், இது ஒரு அமானுஷ்யத்தின் வேலை தான் என்றறிந்து, பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான ஆதியை அங்கு அழைக்கிறது கல்லூரி நிர்வாகம்.
நூலகத்தில் பல அமானுஷ்யங்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ஆதி. அதுமட்டுமல்லாமல், பழமையான நூலகமானது பல வருடங்களுக்கு முன் தேவாலயமாக இருந்ததையும் கண்டறிகிறார்.
தேவாலயம் எப்படி அமானுஷ்யங்களின் கூடாரமாக ஆனது. ? யார் அந்த அமானுஷ்யம்.?? எதற்காக மாணவர்களை கொல்கிறது.??? என்பதற்கான விடை தான் சப்தம் படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆதி, ஈரம் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகனோடு. ஈரம் படத்தில் கொடுத்த அதே நடிப்பை இப்படத்தில் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஆதி. தனது கேரக்டரின் பலத்தை உணர்ந்து அக்கதாபாத்திரமாகவே நகர்ந்து சென்றிருக்கிறார் ஆதி.
அழகிலும் நடிப்பிலும் சிறப்பாக இருக்கிறார் நடிகை லக்ஷ்மி மேனன். அதிலும் பேயாக மாறும் காட்சியில் நடிப்பில் மிரட்டி விட்டுவிட்டார் லட்சுமி மேனன்.
சிம்ரன் மற்றும் லைலா இருவருக்குமே குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவான ஒரு நடிப்பை கொடுத்து நம்மை வெகுவாக கவர்ந்திருக்கின்றனர். அதிலும் லைலாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் தூணாக வந்து நிற்கிறது. ஒவ்வொரு ப்ரேமிலும் அப்படியான மெனக்கெடல் தெரிகிறது. ஒளிப்பதிவு படத்தினை அடுத்த ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
இப்படத்திற்கென்று யூனிக் இசையைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். பிஜிஎம் ஒவ்வொன்றும் திரையரங்குகளில் அதிர வைக்கிறது.
இன்னும் சற்று தெளிவான திரைக்கதையை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான ஒரு காட்சியமைப்பை இயக்குனர் கொடுத்திருக்கலாமோ என்ற கேள்வியும் நம்மில் எழாமல் இல்லை.
மொத்தத்தில்,
சப்தம் – ஈரம் அளவிற்கு இல்லையே என்ற மனநிலை ஏற்பட்டாலும் ஒருமுறை பார்க்கலாம்…