Spotlightசினிமாவிமர்சனங்கள்

சைரன் விமர்சனம் 3.5/5

அறிமுக இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் சைரன்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார்.

பின்னணி இசையை சாம் சி எஸ் கவனித்திருக்கிறார்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார் நாயகன் ஜெயம் ரவி.

இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கொலை குற்றவாளி என்பதால், தந்தை மீது வெறுப்பை மட்டுமே வைத்திருக்கிறார் மகள். மகள் மீது அலாதி அன்பு வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

தனது குடும்பத்தை காண்பதற்காக இரண்டு வார பரோலில் வெளியே வருகிறார் ஜெயம் ரவி. லோக்கல் ஸ்டேஷனில் தினசரி கையொழுத்திட வருகிறார். இவருக்கு போலீஸ் பாதுகாப்பிற்காக யோகிபாபு இருக்கிறார்.

லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஜெயம் ரவி வெளிவந்த சில நாட்களிலேயே ஊரின் முக்கிய அரசியல்வாதி கொலை செய்யப்படுகிறார்.

இந்த கொலையை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்த இரண்டு நாட்களில் மற்றொருவரும் கொல்லப்படுகிறார்.

பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவி மீது சந்தேகப்பட்டு அவரை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

எதற்காக ஜெயம் ரவி ஆயுள் தண்டனை பெற்றார்.? நடந்த கொலைகளுக்கும் ஜெயம் ரவிக்கும் சம்மந்தம் இருக்கிறதா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

வெள்ளை தாடியுடன் மிரட்டலான ஒரு லுக்கில் அனைவரையும் அசர வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஜெயிலில் எண்ட்ரீ ஆகும் காட்சியில் ஆரம்பித்து, பல வருடம் கழித்து வீட்டிற்கு வரும் போது தனது வீட்டை பார்க்கும் போதும், தனது அம்மா, உடன் பிறந்தவர்களை காணும் போது நடிப்பில் உச்சம் தொட்டு விட்டார் ஜெயம் ரவி.

தனது அனுபவ நடிப்பை அள்ளி வீசியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சியிலும் அதிரடி காட்டியிருக்கிறார். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் மிரட்டலான ஆக்‌ஷனை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், வித்தியாசமான ஒரு கேரக்டரை ஏற்று நடித்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் கீர்த்தி சுரேஷும், தன்னால் முடிந்த நடிப்பை அழகாகவே கொடுத்திருக்கிறார். இன்னும் சற்று கூடுதலான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கலாமோ என்றும் தோன்றியது.

வில்லன்களின் கதாபாத்திரமும் அசத்தல் தான். யோகிபாபுவின் காமெடி அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறது.

சாம் சி எஸ்’ன் பின்னணி இசை ஆரம்பத்தில் மிரட்டலை கொடுத்திருந்தது.. ஜி வி பிரகாஷின் பாடல்களும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் தான் என்றே கூறலாம். ப்ளாஷ் பேக் காட்சியையும் நிகழ்கால காட்சியையும் ஒருங்கே கொண்டு சென்றது பார்ப்பதற்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்றியிருந்தது.

லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், அதை எல்லாம் வேகமான திரைக்கதை அடித்து நொறுக்கி விடுகிறது.

மாற்று ஜாதி காதலை மிக நுணுக்கமாக பயன்படுத்தி, அதை வைத்து நடக்கும் அரசியலையும், அப்பா – மகள் பாசத்தையும் மிக தெளிவான நோக்கோடு கையாண்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.

படத்தின் வசனங்கள் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. முதல் படம் என்பது போல் இல்லாமல் ஒரு அனுபவ இயக்குனரின் பார்வையாக கொண்டு படத்தை இயக்கி அதில் வென்றும் காண்பித்திருக்கிறார் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ். தமிழ் சினிமாவிற்கு தரமான ஒரு இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

சைரன் – ஸ்பீடு…

Facebook Comments

Related Articles

Back to top button