Spotlightதமிழ்நாடு

சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

அக்டோபர் -14-ந்தேதி காலை 9மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையபடுத்தி இன்பா என்ற இளைஞர் எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர் சித்ரா லட்சுமணன்,மக்கள் குரல் ராம்ஜி , கொடைக்கானல் காந்தி எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை ,வரலாற்று துறை தலைவர் கவுசல்யா குமாரி ,எழுத்தாளர் .ம .ஸ்வீட்லின், எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய சிவக்குமார் சிவாஜியின் பட வசனங்களையும், ராமாயண, மாகபாரத மேற்கோள் பாடல்களையும் தன்குரலில் பேச அரங்கம் அதிர்ந்தது.

அவர் ஆற்றிய உரையிலிருந்து…

இந்த நிகழ்வு இங்கு நடப்பதற்கான முழுமுதல் காரணம் இன்பா. நான் சிவாஜியுடன் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், சிவாஜி பற்றி அனைத்து விஷயங்களும் புள்ளி விவரங்களுடன் தன் புத்தகத்தில் அவர் சொல்லியிருந்தார். சிவாஜி பற்றி முழுமையான ஒரு உரை நிகழ்த்த நினைத்த போது இன்பாவின் புத்தகம் தான் உறுதுணையாக இருந்தது. கடந்தாண்டு நடந்த உரையில் பதினைந்தாயிரம் பேர் முன்னிலையில் சிவாஜியின் 35 ஆண்டு கால சினிமாக்களை ஒரே மூச்சில் ஒரே டேக்கில் 75 நிமிடங்கள் பேசினேன்.

நான் பிறந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், தண்ணி மாதிரி பாவச்செயல். தீபாவளி பொங்கல் மாதிரி பண்டிகைகளில் அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த மாதிரி ஒரு பண்டிகை நாளில் 1956ல் “வணங்காமுடி” படம் பார்த்தேன். வசனம் எழுதியவர் ஏ கே வேலன் நடித்தவர் நம்ம வாத்தியார் சிவாஜி. உயிர் ,உடல் என எங்கும் நீக்கமற நடிப்பு ஊறிப்போனவர். சிற்பி இளவரசியை காதலிக்ககூடாது என சொல்ல இவர் காதலிப்பார் இவரை நாடு கடத்த, மன்னன் உத்தரவிட அதனை எதிர்த்து வசனம் பேசுவார். அரஙகமே அதிரும். அப்போதே சாவதற்குள் அந்த மனிதனை பார்த்துவிட்டு சாக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2 வருடங்களில் 1958 ல் சிவாஜிக்கு நெருக்கமானவர் குடும்பத்தில் கோயம்புத்தூரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். காலம் ஓடியது, ஓவிய கல்லூரி சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965 ல் நடிப்புதுறைக்குள் வந்தேன். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன். அதே நேரத்தில் கந்தன் கருணை படத்தில் முருகனுக்கு 36 பேரைப்பார்த்து கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன். அதில் தூதுவனாக வீரபாகுவாக என் வாத்தியார் சிவாஜி நடித்தார். அவரும் அசோகனும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது போய்ப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய வசனத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேத்த முடியாது என முடிவு செய்து சொந்தமாக நாடக ட்ரூப் ஆரம்பித்தேன் அது முடியமால் மேஜர் சுந்தர் ராஜன் ட்ரூப்பில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்கள் நடித்தேன். அப்போது தான் மனப்பாடம் செய்யும் கலையை கற்றேன்.

67 வயதில் கம்பராமயணம் 15 ஆயிரம் படல்கள் கற்று அதனை சுருக்கி உரை நிகழ்த்தினேன். மகாபாரதம் 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து கற்று 6500 மாணவர்கள் முன்னே உரை நிகழ்த்தினேன். இதற்கெல்லாம் ஆசனாக இருந்தவர் சிவாஜி. என்னால் இது முடிகிறதென்றால் உங்களால் இதையும் தாண்ட முடியும். என்னை மாதிரி நூறு மடங்கு சாதனைகளை நீங்கள் புரிய முடியும்.

எவராவது, நான் மனனம் செய்த சாதனையை முறியடித்து, கற்று தேர்ந்து சாதனை புரிந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

இப்போது உரையின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

வாத்தியார் சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. கலை உலகம் திரண்டு விழா எடுத்தது. அம்மையார் ஜெயலலிதா தலைமை தாங்கினார் அப்போது வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.

பள்ளிப் படிப்பு இல்லை,
பரம்பரை பெருமை இல்லை,
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்,
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று திரைஉலகில் அழியாது இடம்பிடித்து விட்டான், ஒருசாண் முகத்தில் ஒராயிரம் பாவனை காட்டி, சிம்மக்குரலில் தீந்தமிழ் பேசி, அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்,
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்கூடடுவனாக, அரிச்சந்திரனாக , அசோகனாக, அப்பராய், ஐந்தாம் ஜார்ஜாக, வ ஊ சி யாக, வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்கு பாடங்கள். நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான். மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரி காட்டிவிட்டான்.

கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என மானிட வரலாறு சொல்ல,

சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என தமிழக திரைவரலாறு சொல்லும்.

வாழ்க சிவாஜி நாமம்!
ஓங்குக சிவாஜி புகழ்! நன்றி.

Facebook Comments

Related Articles

Back to top button